ஜேஇஇ மெயின் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறதா..! மத்திய அரசின் முடிவு என்ன..?

16 April 2021, 9:16 pm
JEE_Main_Updatenews360
Quick Share

தற்போதைய கொரோனா சூழ்நிலையில் மாணவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் அவர்களின் திடீர் மாற்றங்கள், நுழைவுத் தேர்வுகள் ஆகியவற்றால் அவர்களின் ஏற்பாடுகள் தடைபட்டு வருகின்றன. 

12 ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) எடுத்த முடிவைத் தொடர்ந்து, ஒரு பிரிவு மாணவர்கள் இப்போது பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயினை ஒத்திவைக்கக் கோருகின்றனர். இது சமூக ஊடகங்களில் கடும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

ஜேஇஇ மெயின் ஏப்ரல் அமர்வு ஏப்ரல் 27 முதல் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அதிகாரி ஒருவர், பொறியியல் நுழைவுத் தேர்வு தொடர்பாக புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றும், ஏப்ரல் 27 முதல் திட்டமிடப்பட்டபடி தேர்வு நடைபெறும் என்றும் கூறினார்.

இதற்கிடையில், ஜே.இ.இ மெயின் தேர்வை ஒத்திவைப்பதற்கான குரல்கள் அதிகரித்து வருகிறது. மேலும் கோரிக்கைகள் சமூக ஊடகங்களான ட்விட்டர், பேஸ்புக் போன்றவற்றில் பலமாக எதிரொலித்து வருகிறது.

டெல்லி கேந்திரிய வித்யாலயா மாணவர் அகன்ஷா கோயல், தேர்வுக்கு வருவதற்கு நிலைமை மிகவும் பாதுகாப்பற்றது என்று கூறினார். “எனது கடைசி இரண்டு முயற்சிகள் சரியாக நடக்கவில்லை, எனவே ஏப்ரல், மே முயற்சிகளுக்கு நான் கடுமையாகத் தயாரானேன். ஆனால் படிப்புடன் ஆரோக்கியமும் எனது முன்னுரிமை. எனவே தேர்வை ஒத்திவைக்க என்டிஏவிடம் கேட்டுக்கொண்டேன்.” என்று அவர் கூறினார்.

அகன்ஷாவின் தந்தை ரவீந்தர் கோயல், “இந்த சூழ்நிலையில் எனது மகளை தேர்வில் பங்கேற்க விடமாட்டேன். அவளுக்கு படிக்க போதுமான நேரம் இருக்கிறது” என்றார்.

மற்றொரு கேந்திரிய மாணவர் அபூர்வா சந்தன், தேர்வுகளை நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்ற முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும் நிச்சயமற்ற நிலையில் தேர்வுக்குத் தயாராகி வருவது கடினம் என்றும் தெரிவித்துள்ளார். 

“நான் போர்டு தேர்வுகளுக்கு நன்கு தயார் செய்துள்ளேன். ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், மீண்டும் தயார் செய்ய வேண்டும். தேர்வுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், என்.டி.ஏ தேர்வுகள் நடத்தப்படுகிறதா அல்லது ஒத்திவைக்கப்படுகிறதா என்பதை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என்று அபூர்வா கூறினார். 

என்.டி.ஏவின் முடிவு மாணவர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும், ஏனெனில் நாங்கள் எங்கள் தயாரிப்புகளில் கவனம் செலுத்த முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டைப் போல் அல்லாமல், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மாணவர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மத்திய அரசு நேரடியாக தலையிட்டு, என்டிஏவை தனது முடிவை விரைவாக அறிவிக்கச் செய்தால் மாணவர்கள் நிம்மதியாக தங்கள் பயிற்சியை மேற்கொள்வர் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Views: - 65

0

0