ரூட்டு மாறி 127 கி.மீ. வேகத்தில் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ; ரயில் விபத்துக்கு இதுதான் காரணமா..? வெளியான பகீர் தகவல்!!

Author: Babu Lakshmanan
3 June 2023, 4:39 pm
Quick Share

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்ட்ரலை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. அதேபோல, நேற்று இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரயில்நிலையம் அருகே பெங்களூரூவில் இருந்து ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, பகனகா பஜார் ரயில்நிலையம் அருகே சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தவறுதலாக சென்றுள்ளது. கோரக்பூர் ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பெறப்பட்ட முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் ரயில் மாற்று தண்டவாளத்தில் சென்றதாக தகவல் வெளியாகியது.

மணிக்கு 127 கி.மீ. வேகத்தில் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதியுள்ளது. இதனால், நிலைகுலைந்து போன கோரமண்டல் எக்ஸ்பிரசின் பெட்டிகள், அருகில் உள்ள ரயில்வே தண்டவாளங்களில் விழுந்துள்ளது.

அந்த சமயம் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸின் தடம்புரண்ட பெட்டிகளில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன. இந்த கோர விபத்தில் பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளும் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் மொத்தம் 261 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த கோர விபத்திற்கு சிக்னல் காரணமா..? அல்லது மனித தவறு காரணமா..? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தவறான சிக்னல் கொடுத்ததே விபத்துக்கு காரணம் என 4 பேர் கொண்ட குழு நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ்க்கு பச்சை சிக்னல் கொடுத்துவிட்டு உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மெயின் லைனுக்கு செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பச்சை சிக்னல் ரத்தானதால், லூப் லைனில் சென்று சரக்கு ரயில் மீது மோதியுள்ளது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெட்டிகள் தடம் புரண்டு, மெயின் லைனில் விழுந்ததால் அவ்வழியே வந்த யஷ்வந்த்பூர் – ஹவுரா ரயிலும் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Views: - 233

0

0