“முதலில் பயன்படுத்த மாட்டோம், ஆனால்..”..! அணு ஆயுதம் குறித்து அகிம்சை தினத்தன்று அதிரடி காட்டிய இந்தியா..!

Author: Sekar
3 October 2020, 1:31 pm
shringla_updatenews360
Quick Share

ஒரு அணுசக்தி நாடாக இந்தியா, காந்தி ஜெயந்தி தினமான நேற்று அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையிலும், பாகுபாடற்ற அணு ஆயுதக் குறைப்புக்கும் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

“அணு ஆயுத நாடுகளுக்கு எதிராக முதல் பயன்பாடு இல்லை என்ற கொள்கையையும், அணு ஆயுதமற்ற நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையையும் இந்தியா எப்போதும் கொண்டுள்ளது.” என்று வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா நேற்று ஐநா பொதுச் சபையின் உயர்மட்டக் கூட்டத்தில் அறிவித்தார்.

சீனாவுடனான மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், முன்னதாக இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஆகஸ்ட் மாதம் “இன்று வரை, நமது அணுசக்தி கொள்கை முதல் பயன்பாடு கிடையாது என்பது தான். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது சூழ்நிலைகளைப் பொறுத்தது” எனத் தெரிவித்திருந்தார். 

இதன் மூலம் இந்தியா அணு ஆயுதத்தைக் கொண்டு பயமுறுத்துவதாக பாகிஸ்தான் உலக நாடுகளிடையே பிரச்சாரம் செய்தது. மேலும் பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு ஆதரவான சில மேற்கத்திய பாதுகாப்பு சிந்தனை அமைப்புகளும் வெளியீடுகளும் இந்தியா தனது நிலையை மாற்றிக் கொண்டிருப்பதாக பிரச்சாரம் செய்தன.

ஆனால் ஷ்ரிங்லாவின் அறிக்கை கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் 2’ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை ஐ.நா நினைவுகூருவதற்காக உயர் மட்ட அமர்வு நேற்று நடந்தது. மகாத்மா காந்தியை அவரது பிறந்த நாளில் ஆண்டுதோறும் கௌரவிக்கும் சர்வதேச அகிம்சை தினத்துடன் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஐநா அமர்வில் உரையாற்றிய ஷ்ரிங்க்லா, அணு ஆயுதங்களை முற்றிலுமாக அகற்றுவதற்கு வழிவகுக்கும் உலகளாவிய, சரிபார்க்கக்கூடிய மற்றும் பாகுபாடற்ற அணு ஆயுதக் குறைப்பை இந்தியா நீண்டகாலமாக வலியுறுத்துகிறது என்று கூறியதோடு அணு ஆயுதம் இல்லாத உலகம் படைப்பதே இந்தியாவின் நோக்கம் என்றும் கூறினார்.

“உலகளாவிய அர்ப்பணிப்பு மற்றும் ஒப்புக் கொள்ளப்பட்ட பலதரப்பு கட்டமைப்பால் எழுதப்பட்ட ஒரு படிப்படியான செயல்முறையின் மூலம் அணு ஆயுதக் குறைப்பை அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று ஷ்ரிங்க்லா கூறினார், இதற்கான நம்பிக்கையை வளர்ப்பதற்கு அணு ஆயுதங்களைக் கொண்ட அனைத்து நாடுகளிலும் ஒரு அர்த்தமுள்ள உரையாடல் தேவை என்று அவர் மேலும் கூறினார். .

சர்வதேச அகிம்சை தினத்தை ஐ.நா அனுசரிப்பது குறித்து பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, காந்தியின் பிறந்த ஆண்டு விழாவில் அணு ஆயுதங்களை முற்றிலுமாக அகற்றுவது தொடர்பான உயர்மட்டக் கூட்டமும் பொருத்தமாக நடைபெறுகிறது என்று குறிப்பிட்டார்.

Views: - 41

0

0