ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் வாகனத்துடன் பறிமுதல்

15 January 2021, 4:05 pm
Quick Share

திருப்பதி: திருப்பதியை அடுத்த பெருமாள பள்ளி அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் வாகனத்துடன் அதிரடிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை டிஎஸ்பி வெங்கடய்யா தலைமையில் ஆர். எஸ்.ஐ வாசு, சுரேஷ், வனக் காப்பாளர் ஜானி பாஷா தலைமையில் அதிரடிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று அதிகாலை எஸ்.வி. மிருகக்காட்சிசாலையின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் ஒரு கும்பல் செம்மரம் வெட்டி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.வி.நகர் கல்லறை பகுதியில் போலீசார் சென்றபோது அசோக் லேலண்ட் சரக்கு வாகனத்தில் செம்மரங்கள் ஏற்றி வருவது தெரியவந்தது.

அந்த பகுதிக்கு சென்று கடத்தல்காரர்களை சுற்றி வளைக்க முயன்றபோது செம்மரங்களை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து செம்மரங்களை வாகனத்துடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து டிஎஸ்பி வெங்கடய்யா கூறுகையில் வழக்கமாக பொங்கல் பண்டிகையில், தமிழகத்தில் இருந்து வரக்கூடிய கூலித் தொழிலாளர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் குடும்பத்தினருடன் கொண்டாடுவது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கு நேரத்தில் கடும் நிதி நெருக்கடி சம்பவத்தால் கடத்தல்காரர்கள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் கடத்தல்காரர்கள் மீண்டும் வனப்பகுதியில் சென்று செம்மரங்களை வெட்டுவதற்காக ஒரு வாரத்திற்கு தேவையான 5 முட்டை அரிசி மற்றும் மளிகை பொருட்களும் இந்த வாகனத்தில் சேகரித்து வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றையும் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள 40 செம்மரங்கள், சரக்கு வாகனம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் ஹிமா ஷைலாஜா, இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனப்பகுதியில் தப்பியோடியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Views: - 0

0

0