‘நாங்கள் மேலும் வலுவாகப் போகிறோம்’: 100 நாட்களை கடந்து நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்…!!

6 March 2021, 10:15 am
delhi protest 060321
Quick Share

புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் 100 நாட்களை கடந்து நீடித்து வருகிறது.

மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலைமுறையை ஒழித்துக்கட்டுவதுடன், தங்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னால் கையேந்தி நிற்கச்செய்து விடும் என கூறி, அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை வாபஸ் பெறச்செய்வதற்காக மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், அவை வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இப்போராட்டம் இன்று 100வது நாளை கடந்துள்ளது. இதையொட்டி விவசாயிகள் அமைப்பினர் கருத்து தெரிவித்தனர்.

அப்போது அவர்கள், ‘இந்த போராட்ட இயக்கம் முடிவு பெறுவதற்கு வெகு தொலைவில் உள்ளது. நாங்கள் இன்னும் வலுவாகப்போகிறோம். இந்த நீண்ட போராட்டம் ஒற்றுமையின் செய்தியை விடுத்துள்ளது’ என குறிப்பிட்டார்கள். போராடும் விவசாயிகள் கூட்டமைப்பின் ராகேஷ் திகாய்த் கூறுகையில், ‘நாங்கள் போராடுவதற்கு தயாராக இருக்கிறோம். அரசாங்கம் எங்கள் கோரிக்கைகளை கவனித்து நிறைவேற்றுகிறவரை நாங்கள் இங்கிருந்து நகரப்போவது இல்லை’ என குறிப்பிட்டார்.

அகில இந்திய கிஷான் சங்கார்ஷ் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த கவிதா குருகாந்தி கருத்து தெரிவிக்கையில், ‘இந்த போராட்டம் சமூக அளவில் ஆக்கப்பூர்வமானது என்பதை நிரூபித்து காட்டி உள்ளது. பெண் விவசாயிகளின் அடையாளத்தை வலுப்படுத்தி உள்ளது. அவர்கள் தங்கள் இருப்பையும், பங்களிப்பையும் செய்ய வைத்திருக்கிறது. பெண் விவசாயிகளை விவசாயிகள் என அங்கீகரிக்க வைத்துள்ளது’ என கூறினார்.

Views: - 7

0

0