செப்டம்பர் 15’ம் தேதி வரை காலக்கெடு..! பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்க மத்திய அரசு அழைப்பு..!

29 August 2020, 12:10 pm
padma_awards_updatenews360
Quick Share

குடிமக்களுக்கான நாட்டின் மிக உயர்ந்த விருதுகளான பத்ம விருதுகள் 2021’க்கான பரிந்துரைகளை இந்த ஆண்டு செப்டம்பர் 15’ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பத்ம விருதுகளுக்கான ஆன்லைன் பரிந்துரைகள், 2021 குடியரசு தினத்தை முன்னிட்டு 2020 மே 1 முதல் தொடங்கியுள்ளதாகவும், பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளுக்கான கடைசி தேதி 2020 செப்டம்பர் 15 ஆகும் எனவும் தெரிவித்துள்ளது.

மதிப்புமிக்க விருதுகளுக்கான பரிந்துரைகள் பத்ம விருதுகள் ஆன்லைன் போர்ட்டல் https://padmaawards.gov.in’இல் மட்டுமே பெறப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பத்ம விருதுகள், அதாவது பத்ம விபூஷன், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகியவை நாட்டின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதுகளில் ஒன்றாகும். 1954’ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுகின்றன.

விருதுகள் குடிமக்களின் தனித்துவமான வேலையை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை, வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்றன .

இனம், தொழில், நிலை அல்லது பாலினம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து நபர்களும் இந்த விருதுகளுக்கு தகுதியானவர்கள். மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தவிர பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பத்ம விருதுகளுக்கு தகுதியற்றவர்கள்.

பத்ம விருதுகள் பணம் கொடுத்து வாங்கப்படுவதாக முந்தைய ஆட்சிகளில் குற்றம் சுமத்தப்பட்டு வந்த நிலையில், மோடி தலைமையிலான அரசு, இதை மக்களின் பத்ம விருதுகளாக ஆக மாற்ற வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக தற்போது ஒவ்வொரு ஆண்டும் அனைத்து குடிமக்களும் சுய நியமனம் உள்ளிட்ட பரிந்துரைகளையும் பிறர் குறித்த பரிந்துரைகளையும் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பரிந்துரைகள் மேலே கூறப்பட்ட பத்ம விருதுகளுக்கான ஆன்லைன் போர்ட்டலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தொடர்புடைய விவரங்களையும் கொண்டிருக்க வேண்டும், இதில் கதை வடிவத்தில் மேற்கோள் (அதிகபட்சம் 800 சொற்கள்), அவற்றில் பரிந்துரைக்கப்பட்ட நபரின் தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகள் அல்லது சேவையை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.

இந்த ஆண்டு, இதுவரை, 8,035 பதிவுகள் போர்ட்டலில் செய்யப்பட்டுள்ளன. அதில் 6,361 வேட்பு மனுக்கள் மற்றும் பரிந்துரைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்கள், பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷன் விருது பெற்றவர்கள், சிறப்பான நிறுவனங்கள் ஆகியோரின் மூலம் திறமையானவர்களை அடையாளம் காண ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது.

சமூகத்தின் பிரிவுகள், எஸ்.சி.க்கள் மற்றும் எஸ்.டி.க்கள், திவ்யாங் நபர்கள் மற்றும் சமூகத்திற்கு தன்னலமற்ற சேவையைச் செய்யும் நபர்களை அடையாளம் காண்பதற்காகவே இந்த வலைதளம் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் ‘விருதுகள் மற்றும் பதக்கங்கள்’ என்ற தலைப்பின் கீழ் கிடைக்கின்றன.

Views: - 30

0

0