சுவேந்து அதிகாரியின் கோட்டையில் களமிறங்க முடிவு..! இழப்பை ஈடுசெய்வாரா மம்தா பானர்ஜி..?

18 January 2021, 6:02 pm
Mamata_banerjee_updatenews360
Quick Share

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

நந்திகிராமில் நடந்த ஒரு பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, பாஜகவில் சேர்ந்துள்ள சுவேந்து அதிகாரி உள்ளிட்ட கட்சித் தலைவர்களைப் பற்றிய குறிப்பில், மாறிவரும் தரப்பினரைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்றும், திரிணாமுல் கட்சி உருவானபோது அவர்களில் யாரும் இல்லை என்றும் கூறினார்.

“நான் எப்போதும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை நந்திகிராமில் இருந்து ஆரம்பித்துள்ளேன். இது எனக்கு ஒரு அதிர்ஷ்டமான இடம். எனவே இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் நான் இங்கிருந்து போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறேன். எனது மாநில கட்சித் தலைவர் சுப்ரதா பக்ஷி எனது கருத்தை ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன்.” என மம்தா பானர்ஜி கூறினார். இதையடுத்து மேடையில் இருந்த பக்ஷி, கோரிக்கையை விரைவாக ஏற்றுக்கொண்டார்.

மம்தா பானர்ஜியின் அறிவிப்பு 2020 டிசம்பரில் பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியின் வெற்றிடத்தை நிரப்ப முயலும் அரசியல் ஸ்டண்ட்டாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் 2011 மற்றும் 2016’ஆம் ஆண்டுகளில் அவர் வென்ற தெற்கு கொல்கத்தாவின் பவானிபூர் தொகுதியில் இருந்து போட்டியிடலாம் என்ற கருத்தை மம்தா பானர்ஜி மறுக்கவில்லை.

“முடிந்தால், நான் பவானிபூர் மற்றும் நந்திகிராம் இரண்டிலிருந்தும் போட்டியிடுவேன். ஒரு வேளை, நான் பவானிபூரிலிருந்து போட்டியிட முடியவில்லையென்றால் வேறு யாராவது போட்டியிடுவார்கள்.” என்று அவர் கூறினார்.

சிலரை மேற்கு வங்காளத்தை பாஜகவுக்கு விற்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று மம்தா பானர்ஜி பேரணியின்போது கூறினார்.

“இந்த பகுதியை விட்டு வெளியேறியவர்களுக்கு, எனது வாழ்த்துக்கள். அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாகவும், துணைத் தலைவராகவும் இருக்கட்டும். ஆனால் நீங்கள் வங்காளத்தை பாஜகவுக்கு விற்கத் துணிய வேண்டாம். நான் உயிருடன் இருக்கும் வரை, அவர்கள் என் மாநிலத்தை பாஜகவுக்கு விற்க நான் அனுமதிக்க மாட்டேன்.” என்று அவர் கூறினார்.

2000’களின் பிற்பகுதியில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக பூர்பா மெதினிபூர் மாவட்டத்தில் நந்திகிராமில் நடந்த போராட்டம் மம்தா பானர்ஜியை 2011’ல் ஆட்சிக்கு கொண்டுவர உதவியது. மேலும் இது 34 ஆண்டுகால இடதுசாரிகளின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சுவேந்து அதிகாரி திரிணாமுல் கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்துள்ள நிலையில், சுவேந்து அதிகாரியின் கோட்டையில் தானே நேரடியாக களமிறங்குவதன் மூலம், சுவேந்துவால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியும் என மம்தா பானர்ஜி நம்புவதால் தான், நந்திகிராமில் போட்டியிட அவர் முடிவெடுத்துள்ளதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Views: - 1

0

0