காங்கிரஸ் கூட்டணி செத்துப் போச்சு : மம்தா கொளுத்திப் போட்ட சரவெடி… சோனியா VS மம்தா…!!

Author: Babu Lakshmanan
3 December 2021, 2:19 pm
Quick Share

2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு, பாஜகவுக்கு இணையாக மற்ற
எல்லாக் கட்சிகளையும் முந்திக்கொண்டு மேற்குவங்க முதலமைச்சர்
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் புலிப்பாய்ச்சல் காட்டுகிறது.

காங்கிரஸ் மறுப்பு

கடந்த ஜூலை மாதம் தனது அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மூலம் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கியபோது காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும், மம்தாவின் முயற்சியை பெரிதும் பாராட்டின.

அப்போது மம்தா வைத்ததாகக் கூறப்படும் ஒரே நிபந்தனை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து சந்திப்போம். எந்தக் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறுகிறதோ, அந்தக் கட்சி பிரதமர் பதவியை எடுத்துக் கொள்ளட்டும் என்பதுதான்.

mamata - sonia -updatenews360

ஆனால் இப்படியொரு நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டு விட்டால் தேர்தலுக்கு பின் எதிர்க்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றி விட்டால் அது தங்களுக்கு பெரும் பாதகமாக அமையும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ராகுல் காந்தியும் மறுத்துவிட்டனர்.

உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த பின்னர், இதுகுறித்து யோசிக்கலாம் என்றும் காங்கிரஸ் கூறிவிட்டது.

சந்திக்க மறுப்பு

மேலும் ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், ஹரியானா, குஜராத், கர்நாடகா
மத்திய பிரதேசம், கேரளா, மராட்டியம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் தங்கள் கட்சிக்கு செல்வாக்கு இருப்பதால் பிரதமர் பதவியை எதற்காக எதிர்க்கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கவேண்டும் என்று சோனியா நினைத்ததாலும், மம்தாவின் யோசனையை ஏற்கவில்லை.

அதேநேரம் அகில இந்திய அளவில் திரிணாமுல் காங்கிரஸ் எடுக்கும் முயற்சிக்கு காங்கிரஸ் தலைமை கை கொடுக்கும் என்று மம்தா நம்பினார். அதற்காக 4 மாதங்கள் வரை அமைதி காத்தார். ஆனால் காங்கிரசிடமிருந்து, எந்த சிக்னலும் வரவில்லை.

mamata - sarath pawar - updatenews360

இதனால் எரிச்சலடைந்த மம்தா அண்மையில் டெல்லி வந்தபோது சோனியாவை சந்திக்கவில்லை. அதுமட்டுமின்றி எதற்காக சந்திக்கவேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கும் ஒருபடி மேலே போய் மும்பைக்கு சென்று மூன்று நாட்கள் முகாமிட்டு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் திரட்டுவது குறித்து, தீவிர ஆலோசனையும் நடத்தினார்.

காங்., மீது தாக்கு

அதன் பின்னரே மம்தா காங்கிரஸ் தலைமையை கடுமையாக போட்டு தாக்கத் தொடங்கினர். ராகுலையும் ஒரு பிடி பிடித்தார்.

அவர் கொந்தளித்து கூறுகையில் “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி எப்போதோ செத்துப் போய்விட்டது. வெளிநாட்டில் இருந்து கொண்டு யாரும் அரசியல் பண்ண முடியாது. பாதி நாட்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்தியாவில் அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்க கூடாது. அரசியல் என்றால் கடினமாக உழைக்கவேண்டும். தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுபவர்களால்தான் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்று நையாண்டி செய்தார்.

Mamata 5 Lakhs - Updatenews360

கைவிரித்த PK

இன்னொரு பக்கம் பிரசாந்த் கிஷோர், “காங்கிரசின் தலைமை என்பது ஒரு தனிநபரின் தெய்வீக உரிமை கிடையாது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் 90 சதவீதத்துக்கும் அதிகமான தேர்தல்களில் தோல்வியை சந்தித்து இருக்கும் நிலையில் எதிர்க்கட்சி தலைமை ஜனநாயக ரீதியாக முடிவு செய்யப்படட்டும்” என்று அறிவுரை கூறிஇருக்கிறார்.

sonia - mamata - pk - updatenews360

மம்தாவின் தாக்குதல் கடுமையாக காங்கிரசை காயப்படுத்தி விட்டது.

ஏற்கனவே அசாம் கோவா திரிபுரா பீகார் உத்தரப்பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை மம்தா பானர்ஜி தனது கட்சியில் வளைத்துப் போட்டு விட்டதால் கடும் கோபத்தில் இருக்கும் காங்கிரஸ் மேலிடம் இதனால் அப்படியே கொதித்துப் போனது.

இதுபற்றி கபில்சிபல் கூறுகையில், “காங்கிரஸ் இல்லாத ஐக்கிய முற்போக்கு கூட்டணி, உயிர் இல்லாத உடல் போன்றது” என கடுமையாக சாடினார்.

மேற்குவங்காளத்தில் மார்க்சிஸ்ட்,காங்கிரஸ், பார்வர்ட் பிளாக் கட்சிகளை மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் நிர்மூலமாக்கி விட்டதை நினைவூட்டும் விதமாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா,”பாஜக ஜனநாயக அமைப்புகளை சீரழித்து வருகிறது. மம்தா பானர்ஜியும் அதேபோல் நடந்து கொள்ள மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று எங்களாலும் கேள்வி எழுப்ப முடியும்?” என பதிலடி கொடுத்தார்.

கட்சி தாவும் சீனியர்?

அதேநேரம், காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரான குலாம்நபி ஆசாத், “2024 தேர்தலில் எதிர்க்கட்சிகள் 300 இடங்களில் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையெல்லாம் எனக்கு கிடையாது. அதனால் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அங்கீகாரம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்” என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டு இருக்கிறார்.

அவருடைய இந்த கணிப்பின்படி பார்த்தால் மத்தியில் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமையுமா? என்பதும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. அதுமட்டுமின்றி குலாம்நபி ஆசாத், மம்தாவுக்கு ஆதரவாக பேசுவதுபோல் இந்த கருத்து இருப்பதால், விரைவில் அவர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்து விடுவார் என்றும் பேசப்படுகிறது.

மம்தாவின் காட்டமான பேச்சு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சோனியாவிற்கு எதிராக கொம்பு சீவி விடுவது போலவும் அமைத்துள்ளது.

தமிழக தலைவர்களுக்கு நெருக்கடி

காங்கிரசின் எரிச்சலுக்கு இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. மம்தா தலைமையில் எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் தமிழகம், மராட்டியம், பீகார், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் 2024 தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடுவதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவுடன் கூட்டணி என்ற அந்தஸ்தை இழந்து தொகுதி உடன்பாடு செய்து கொள்ளும் பரிதாப நிலைக்கும் தள்ளப்படலாம்.

தமிழகத்தில் காங்கிரசுக்கு 5 தொகுதிகளை திமுக ஒதுக்கினாலே பெரிய விஷயமாக இருக்கும்.

P Chidambaram - Updatenews360

இதனால் திமுகவுடன் மிகுந்த நெருக்கம் கொண்டுள்ள மூத்த காங்கிரஸ் தலைவரான ப. சிதம்பரம் மற்றும் தமிழக தலைவர்களான கேஎஸ் அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி போன்றோருக்கும் நெருக்கடிகள் உருவாகலாம்.

இதேபோல் மராட்டியம், பீகார் மாநிலங்களிலும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளிடமும் கெஞ்சி கூத்தாடி சீட் கேட்கும் நிலைமைக்கு காங்கிரஸ் தள்ளப்படலாம். இப்படியொரு சூழல் அமைந்தால் காங்கிரஸ் இப்போதுள்ள எம்பிக்களை தக்கவைத்துக்கொள்ளுமா? என்பதும் கேள்விக்குறிதான் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

சோனியா vs மம்தா

இதுபற்றி அவர்கள் மேலும் கூறுகையில், “பிப்ரவரி மாதம் நடக்கும் 5 மாநில தேர்தலுக்குப் பிறகே எதிர்க்கட்சிகளின் கூட்டணி பற்றி காங்கிரஸ் முடிவு செய்யும். அதேநேரம் இப்போதே அதன் தலைமையை கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொண்டால் மீண்டும் ஒருமுறை ராகுலுக்கு பிரதமர் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.

எது எப்படி இருந்தாலும், காங்கிரஸ் தலைமையில்தான் எதிர்க்கட்சி கூட்டணி அமைய வேண்டும் என்பதில் சோனியா மிக உறுதியாக இருக்கிறார். ஒருவேளை இதை மம்தா, சரத்பவார், முலாயம் சிங், லாலு பிரசாத், கெஜ்ரிவால் போன்றவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தால் மம்தாவுக்கு எதிராக அனைவருக்கும் பரிச்சயமான தனது மகள் பிரியங்காவை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் காங்கிரஸ் தயக்கம் காட்டாது. அதனால் 5 மாநில தேர்தல் சோனியாவுக்கும், மம்தாவுக்கும் ஒரு செமி பைனல் மாதிரித்தான்.

ஒருவேளை இதில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் பிரியங்காதான் காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று இப்போதே டெல்லியில் பேச்சு அடிபடத் தொடங்கி இருக்கிறது. ஏனென்றால் தேர்தலுக்குப் பின்பு மம்தா எப்படி நடந்து கொள்வார் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

அதுவும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உயிருடன் இல்லை என்று மம்தா கூறியிருப்பது
காங்கிரசின் தன்மானத்தை சீண்டிப் பார்ப்பதாக உள்ளது. இது தனக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால் என்று சோனியா கருதுவதாகவும் பரபரப்பு பேச்சு டெல்லியில் உள்ளது. அதனால்தான் அவர் இதுவரை பிடிகொடுக்கவில்லை” என்று அவர்கள் தெரிவித்தனர்.

Views: - 305

0

0