சீக்கிய புத்தாண்டைக் கொண்டாட பாகிஸ்தான் சென்றுள்ள 800 இந்தியர்கள்..! வைசாகி அறுவடைத் திருவிழாவிலும் பங்கேற்பு..!

12 April 2021, 9:16 pm
sikh_pakistan_updatenews360
Quick Share

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 16’ஆம் நூற்றாண்டு குருத்வாராவில் நடைபெறும் வைசாகி எனும் 10 நாள் அறுவடை விழாவில் கலந்து கொள்வதற்காக 800’க்கும் மேற்பட்ட இந்திய சீக்கியர்கள் இன்று பாகிஸ்தானின் லாகூருக்கு சென்றனர்.

‘பைசாக்கி’ என்றும் அழைக்கப்படும் ‘வைசாகி’ என்பது சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் வசந்த கால அறுவடை பண்டிகையாகும். இது சீக்கிய புத்தாண்டைக் குறிக்கிறது மற்றும் 1699’இல் குரு கோவிந்த் சிங்கின் கீழ் கல்சா பந்த் (துறவி-வீரர்கள்) உருவானதை நினைவுகூர்கிறது.

வாகா எல்லையில் இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய யாத்ரீகர்களை பாகிஸ்தானின் எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரியம் (ஈடிபிபி) மற்றும் சீக்கிய குருத்வாரா பர்பந்திக் குழு அதிகாரிகள் வரவேற்றனர்.

ஈபிடிபி என்பது பிரிவினையைத் தொடர்ந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் மத சொத்துக்கள் மற்றும் ஆலயங்களை நிர்வகிக்கும் ஒரு சட்டப்பூர்வ குழு ஆகும்.

“ஹஸன் அப்தாலின் குருத்வாரா பஞ்சா சாஹிப்பில் நடந்த ‘பைசாக்கி’ சடங்குகளில் கலந்து கொள்வதற்காக இன்று மொத்தம் 815 சீக்கிய யாத்ரீகர்கள் இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக வந்தனர்.” என்று ஈடிபிபி செய்தித் தொடர்பாளர் அமீர் ஹாஷ்மி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

வாகா எல்லையில் சீக்கிய பாரம்பரியத்தின் படி யாத்ரீகர்கள் லங்கர் (உணவு) பரிமாறப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர் என அவர் மேலும் கூறினார்.

பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரிலிருந்து 350 கி.மீ தூரத்தில் உள்ள ஹசன் அப்தாலில் உள்ள குருத்வாரா பஞ்சா சாஹிப்பில், சீக்கிய மதத்தின் நிறுவனர் குரு நானக்கின் கைரேகை இருப்பதாக நம்பப்படுகிறது.

“தேவையான குடிவரவு அனுமதிக்குப் பிறகு, அவர்கள் பஸ்ஸில் குருத்வாரா பஞ்சா சாஹிப், ஹசன் அப்தால் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முக்கிய திருவிழா ஏப்ரல் 14’ஆம் தேதி பஞ்சா சாஹிப்பில் நடைபெறும். அவர்கள் 10 நாள் தங்கியிருக்கும் காலத்தில் பாகிஸ்தானில் உள்ள அனைத்து முக்கியமான மற்றும் வரலாற்று குருத்வாராக்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள். ஏப்ரல் 22 ஆம் தேதி இந்தியா திரும்புவர்.” என்று ஹாஷ்மி கூறினார்.

முன்னதாக ‘பைசாக்கி’ திருவிழா தொடர்பாக புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் 1,100’க்கும் மேற்பட்ட சீக்கிய யாத்ரீகர்களுக்கு விசா வழங்கியிருந்தது.

1974’ஆம் ஆண்டு மத ஆலயங்களுக்கு வருகை தரும் பாகிஸ்தான்-இந்தியா நெறிமுறையின் கட்டமைப்பின் கீழ், இந்தியாவில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மத விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளைக் காண பாகிஸ்தானுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

Views: - 19

0

0