உத்தரபிரதேசத்திலும் கால்பதித்த அசாதுதீன் ஒவைசி..! அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!

16 December 2020, 2:06 pm
owaisi_rajbhar_updatenews360
Quick Share

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் நம்பிக்கையுடன் உள்ள ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, வட மாநிலங்கள் அனைத்திலும் காலூன்ற திட்டமிடுகிறார். ஒவைசி இன்று உத்தரபிரதேசத்தின் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் (எஸ்.பி.எஸ்.பி) தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை லக்னோ ஹோட்டலில் சந்தித்தார். 

இரு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு உத்தரபிரதேசத்தில் 2022’இல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏஐஎம்ஐஎம் மற்றும் எஸ்.பி.எஸ்.பி இடையே கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது தொடர்பானது எனக் கூறப்படுகிறது.

“நாங்கள் இருவரும் உங்களுக்கு முன் அமர்ந்திருக்கிறோம், நாங்கள் ஒன்றாக நிற்கிறோம். அவருடைய தலைமையின் கீழ் நாங்கள் செயல்படுவோம்” என்று 2022 உத்தரபிரதேச தேர்தலில் ஏஐஎம்ஐஎம் நிலைப்பாடு குறித்து ஒவைசி கூறினார்.

ராஜ்பர் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாகூராபாத் தொகுதியைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவான ஓம் பிரகாஷ் ராஜ்பரின் கட்சி, தற்போது ஏக்தா மன்ச் கூட்டணியின் ஒரு அங்கமாக உள்ளது. ராஜ்பர் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி கட்சி உத்தரபிரதேசத்தில் 2022 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த ஒரு நாள் கழித்து இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் சிவ்பால் யாதவையும் சந்திப்பேன் என்று ஒவைசி கூறினார். சிவ்பால் யாதவ் சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் தம்பி ஆவார். அவரை தேர்தலுக்கு முன் சமாஜ்வாதியுடன் இணைத்து விட வேண்டும் என அகிலேஷ் யாதவ் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ஒவைசியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவது, முலாயம் சிங் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமாஜ்வாதியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான சிவ்பால், அகிலேஷ் யாதவுடன் ஏற்பட்ட பிளவுக்குப் பின்னர், 2018’ல் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ஒவைசியின் உத்தரபிரதேச பயணமும், மாநிலத்தின் சிறிய கட்சிகளுடனான அவரது கூட்டணி முயற்சியும், சிறுபான்மை வாக்கு வங்கியை மட்டும் நம்பியுள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் போன்ற கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Views: - 7

0

0