“பிரான்சில் தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்லாத்துக்கு எதிரானவர்கள்”..! அசாதுதீன் ஒவைசி கண்டிப்பு..!

2 November 2020, 3:17 pm
Asaduddin_Owaisi_UpdateNews360
Quick Share

பிரான்சில் முகமது நபி அவர்களின் கார்ட்டூன்கள் பரப்பப்படுவது குறித்து தனக்கு வேதனை ஏற்பட்டதாகவும், அதை வெளியிடக் கூடாது என்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

ஆனால் மதத்தின் பெயரில் பிரான்சில் நடக்கும் வன்முறைச் செயல்களை தான் ஏற்கவில்லை என்றும் ஜிகாத் என்ற பெயரில் அப்பாவி மக்களைக் கொல்வோர் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்றும் ஒவைசி மேலும் கூறினார்.

பிரான்சில் சமீபத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கருத்து சுதந்திரம் குறித்த ஒரு வகுப்பில், முகமது நபியின் கேலிச் சித்திரத்தைக் காட்டியதால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அவரை தலை துண்டித்து கொன்றனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கோபத்தைக் கிளறிய நிலையில், முகமது நபியின் கேலிச் சித்திரத்தை அரசு கட்டிடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் வெளிப்படையாக வைக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரான்ஸ் அரசும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிராக நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது.

ஆனால் பின்னர் பிரான்சில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கத்திக்குத்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய அசாதுதீன் ஒவைசி, பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னால் இருப்பவர்களுக்கு இஸ்லாத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். ஆனால் முகமது நபியின் கேலிச் சித்திரங்கள் வெளியிடப்பட்டு வருவது தனக்கு வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பீகாரில் சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து பேசிய ஒவைசி, ​​காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணியை விமர்சித்தார். முதலமைச்சர் நிதீஷ் குமாரைக் கண்டித்த அவர், “பீகார் மக்கள் நிதீஷ் அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால் மக்கள் இன்னும் ஆர்ஜேடியை நம்பத் தயாராக இல்லை.” என்று கூறினார்.

பீகார் தேர்தலுக்கான ஆறு கட்சிகளின் புதிய முன்னணியை ராஷ்டிரிய லோக் சமதா கட்சி மற்றும் எய்ஐஎம்ஐஎம் அறிவித்துள்ளது. அதன் முதலமைச்சர் வேட்பாளராக உபேந்திர குஷ்வாஹாவை அறிவித்துள்ளது.

கிராண்ட் ஜனநாயக மதச்சார்பற்ற முன்னணி எனும் பெயரில் உருவாகியுள்ள இந்த கூட்டணியில், ஆர்.எல்.எஸ்.பி, ஏ.ஐ.எம்.ஐ.எம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சுஹால்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, சமாஜிக் ஜனதா தளம் மற்றும் ஜந்தந்த்ரிக் சோசலிஸ்ட் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 7

0

0