சிபிஐ விசாரணையை எதிர்க்கும் மகாராஷ்டிரா..! பால்கர் வன்முறையில் பிரமாணப் பத்திரம் தாக்கல்..!
6 August 2020, 4:16 pmமகாராஷ்டிரா அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் மூலம் பால்கர் வன்முறை வழக்கு விசாரணையை சிபிஐ அல்லது நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட பொதுநல மனுவை எதிர்த்தது.
மாநில காவல்துறையின் விசாரணையே போதுமானது என்று கூறி, மகாராஷ்டிரா காவல்துறை உதவி ஐ.ஜி. விநாயக் தேஷ்முக், பிரமாணப் பத்திரத்தில், நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்காக அரசு சி.ஐ.டி.’யைச் சேர்ந்த 6 காவல்துறையினரை அலட்சியம் மற்றும் கடமையை சரியாக செய்யாததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், வழக்கறிஞர் சஷாங்க் சேகர் ஜா தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, பிரமாணப் பத்திரத்தை முழுமையாகப் பெற மறுத்து, குற்றப்பத்திரிகையின் நகல்களையும், தவறான போலீஸ்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கையும் மூன்று வாரங்களுக்குப் பிறகு ஒத்தி வைத்துள்ளது.
பிரமாணப் பத்திரத்தில் முக்கிய அம்சங்கள் :
முழுமையான நேர்மை, சுதந்திரம், விசாரணையில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைப் பேணுவதற்காக, ஏப்ரல் 20 அன்று நடந்த சம்பவத்திற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு வழக்கை மாநில அரசு சிபிசிஐடிக்கு மாற்றியது.
மொத்தம் 300 பேர் மீது மூன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சம்பவத்தை தடுக்காத காவல்துறையினருக்கு எதிராக உத்தரவிடப்பட்ட விசாரணையில், சம்பவத்தை கையாள்வதிலும், குற்றத்த் தடுப்பதிலும் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் இருந்த ஆறு பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக பால்கர் கொலை சம்பவத்தில் மகாராஷ்டிரா காவல்துறை விசாரணை அறிக்கையை மே முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றம் கோரியிருந்தது.
நீதிமன்ற கண்காணிப்பு அல்லது பால்கர் வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) மாற்றுமாறு கோரி, வழக்கறிஞர் சஷாங்க் சேகர் ஜா மற்றும் பல மனுதாரர்கள் பொது நலன் வழக்குடன் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
ஆனால் தற்போது நடைபெற்று வரும் விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே சமயம் இந்த வழக்கை விசாரிக்கும் மகாராஷ்டிரா போலீசாரிடம் விசாரணையின் நிலை குறித்த அறிக்கையைக் கோரியுள்ளது.
நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் சம்பவம் நடந்த இடத்தில் கூட்டம் கூடியிருப்பதை பொதுநல வழக்கு கேள்வி எழுப்பியுள்ளது. உள்ளூர் நிர்வாகமும் காவல்துறையும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் அது கூறியது.
பால்கர் சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளதாகவும் மகாராஷ்டிராவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.