2ம் உலகப்போரில் மாயமான அமெரிக்க விமானம்: 77 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலையில் கண்டெடுப்பு..!!!

Author: Rajesh
25 January 2022, 2:22 pm
Quick Share

இட்டா நகர்: இரண்டாம் உலகப்போரின் போது காணாமல் போன அமெரிக்க விமானம் இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா ராணுவத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் இந்தியா, சீனா மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் விழுந்து காணாமல் போனது. அந்த வகையில் சீனாவின் குன்மிங்கில் இருந்து 1945 ஆம் ஆண்டு 13 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சி-46 ரக அமெரிக்க விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் ரேடாருடனான தொடர்பை இழந்து மாயமானது.

மாயமான விமானம் எங்கு போனது என்பது யாருக்கும் தெரியாமலேயே இருந்தது. அதேவேளை, மோசமான வானிலை காரணமாக இந்தியாவின் அருணாச்சல பிரதேச இமயமலை பகுதியில் விழுந்திருக்கலாம் என தகவல் வெளியானது.

இந்நிலையில், மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் மகன் தற்போது இறங்கினார். நியூயார்க் நகரை சேர்ந்த பில் ஸ்கேர் என்ற அந்த நபர் , விமான தேடுதல் பணியை அமெரிக்க மலையேற்ற சாகச வீரர் கிளேட்டன் குக்லெஸ் இடம் ஒப்படைத்திருந்தார்.

அதன் அடிப்படையில் தனது குழுவினருடன் குக்லெஸ் இமயமலை பகுதியில் விமானம் குறித்த தேடுதல் வேட்டையில் தொடர்நது ஈடுபட்டுவந்தார். கடும் முயற்சிக்கு பின்னர் பனி மூடிய பகுதியில் கிடந்த போர் விமான பாகத்தை இந்த குழு நேற்று கண்டுபிடித்தது.

பனி படர்ந்த பாறைகளுக்கு நடுவே விமான வால்பகுதியில் இருந்த குறியீட்டு எண்ணைக் கொண்டு அடையாளம் காண முடிந்தததாக கிளேட்டன் குக்லெஸ் தெரிவித்துள்ளார். விமானம் காணாமல் போய் 77 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Views: - 2512

0

0