இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களை தொடங்கி வைத்தார் மோடி..! தண்டி யாத்திரையும் இன்று தொடக்கம்..!

12 March 2021, 12:32 pm
Modi_Sabarmati_UpdateNews360
Quick Share

ஆசாதி கா அம்ருத் மஹோத்ஸவ் எனும் 75 ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார். மேலும் மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையின் 91’ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, அகமதாபாத்தின் சபர்மதி ஆசிரமத்திலிருந்து பாதயாத்திரையை மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் விதமாக, அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து குஜராத்தின் நவ்சரி மாவட்டத்தில் தண்டி வரை 241 மைல் தூரம் அணிவகுத்துச் செல்லப்படும். யாத்திரை செல்லும் வழியில் உள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களும் நாடு முழுவதும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய உள்ளது.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி, “இன்றைய அமிர்த மஹோத்ஸவ் திட்டம் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொடங்குகிறது. அங்கு இருந்து தான் மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை தொடங்கியது. இந்திய மக்களிடையே பெருமை மற்றும் சுயசார்பை வளர்ப்பதில் இந்த யாத்திரை முக்கிய பங்கு வகித்தது. மகாத்மா மற்றும் நம் சிறந்த சுதந்திர போராளிகளுக்கு அஞ்சலி.” எனக் கூறினார்.

மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தின் ஹ்ரிடே குஞ்சில் பிரதமர் மகாத்மாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். அபய் காட் அருகே நடந்த ஒரு சிறப்பு கண்காட்சியில் படங்கள், பத்திரிகைகள் மற்றும் பிற தொகுப்புகளையும் அவர் பார்வையிட்டார்.

இதற்கிடையில், அகமதாபாத்தில் உள்ள அபய் காட் அருகே கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி இன்று இங்கிருந்து தண்டி யாத்திரையை தொடங்கி வைக்கிறார்.

ஆசாதி கா அம்ருத் மஹோத்ஸவ்

ஆசாதி கா அம்ருத் மஹோத்ஸவ் இந்தியாவின் சுதந்திரத்தின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்படவுள்ள தொடர் நிகழ்வுகளைக் குறிக்கும்.

இதன் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள கொள்கைகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளைத் திட்டமிடுவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான ஒரு தேசிய அமலாக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி யாத்திரையை தொடங்கி வைக்கும் பிரதமர்

அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து நவ்சாரியில் உள்ள தண்டி வரை 81 அணிவகுப்பாளர்களால் இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படும். இந்த 241 மைல் நீளமுள்ள பயணம் ஏப்ரல் 5 ஆம் தேதி முடிவடையும், இது 25 நாட்கள் நீடிக்கும்.

மத்திய அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல் மார்ச் 12 தேதியின் முக்கியத்துவத்தை விளக்கினார், இந்த நாளில்தான் மகாத்மா காந்தி 81 பேருடன் புகழ்பெற்ற தண்டி யாத்திரையை நடத்தி உப்புக்கு வரி விதிக்கும் சட்டத்தை எதிர்த்தார். பாதயாத்திரையின் முதல் 75 கிலோமீட்டர் தூரத்திற்கு மத்திய அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல் வழிநடத்துவார்.

Views: - 32

0

0