இன்னும் 10 வருஷத்துக்கு மோடி ஆட்சியா…? PK கணிப்பால் எதிர்க்கட்சிகள் கலக்கம்!

Author: Babu Lakshmanan
28 October 2021, 8:08 pm
Modi - pk - updatenews360
Quick Share

பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கடந்த 2012 முதல் 2021 வரை 8 மாநிலங்களில் பிரதான அரசியல் கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறார். அதில் 7 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் சார்ந்திருந்த கட்சிகளுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

கைதேர்ந்த PK

அதாவது, அந்தக் கட்சிகள் ஆட்சியை கைப்பற்றி இருக்கின்றன அல்லது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. 2021 சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும், தமிழகத்தில் திமுகவும் வெற்றி பெற்றதில் பிரசாந்த் கிஷோரின் பீகார் மூளைக்கு பெரும்பங்கு உண்டு. அரசியலை வியாபாரம் என்பார்கள், ஆனால் அதை ஒரு பெரும் கார்ப்பரேட் கம்பெனியாக மாற்றிய பெருமை பிரசாந்த் கிஷோரையே சாரும்.

Prasanth-Kishore-updatenews360

அதனால்தான் என்னவோ, 2022 கோவா சட்டப் பேரவை தேர்தலுக்கும் 2026-ல் மேற்குவங்க தேர்தலுக்கும் தனது கட்சிக்கு வியூகங்களை வகுத்துக் கொடுக்க பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் மம்தா ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்.

ஒருங்கிணைக்க முயற்சி

அதேநேரம், மம்தாவுக்கு மிகுந்த விசுவாசமாக நடந்து கொள்ளும் விதமாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை வீழ்த்துவதற்காக, 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க படாதபாடு பட்டும் வருகிறார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரை மாறிமாறி சந்தித்து ஆலோசனையும் நடத்தினார். காங்கிரஸ் அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ளப் போவதாகவும் அப்போது தகவல்கள் வெளியானது. ஆனால் மூத்த தலைவர்கள் பிரசாந்த் கிஷோருக்கு செக் வைத்தனர். அதனால் அவரால் காங்கிரஸில் இணைய முடியவில்லை.

இந்த நிலையில்தான் காங்கிரஸ், ஆம் ஆத்மி சமாஜ்வாடி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட 18 பிரதான எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்க முற்பட்ட மம்தாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதற்கு, இணைப்புப் பாலம் போல செயல்பட்டு வந்த பிரசாந்த் கிஷோரும் நொந்து போனார்.

பாஜக கோலோச்சும்..

இந்த நிலையில்தான் கோவா தலைநகர் பனாஜியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர், தனது ஆருடம் ஒன்றை வெளிப்படையாக கூறினார்.

பிரசாந்த் கிஷோர் பேசும்போது, “இந்த நாட்டில் இன்னும் பல பத்தாண்டுகளுக்கு பாஜக வலுவான, சக்தி கொண்ட கட்சியாக திகழும். மோடியை தூக்கி எறிந்தாலும் கூட பாஜகவை எளிதில் தூக்கி வீச முடியாது. பாஜகவுடன் இன்னும் பல ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சிகள் போராட வேண்டியதிருக்கும். தேசிய அரசியலில் அந்தக் கட்சிதான் நாட்டின் மைய சக்தியாகவும் இருக்கும். 1952 முதல் 1992 வரை எப்படி 40 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தேசிய அளவில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்ததோ, அதுபோல பாஜகவும் இன்னும் பல பத்தாண்டுகளுக்கு கோலோச்சும்.

modi-amith-shah-updatenews360

தேசிய அளவில் தனிப்பட்ட முறையில் ஒரு கட்சி 30 சதவீத வாக்குகளை பெற்று விட்டால் அந்தக் கட்சியை வீழ்த்துவது அவ்வளவு சுலபமான காரியமும் அல்ல.

ராகுல் தப்புக் கணக்கு

சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்த போதிலும் கூட பிரதமர் மோடியின் செல்வாக்கு குறைந்ததுபோல தெரியவில்லை. எனவே மக்கள் தாங்களாகவே மோடியை தூக்கி எறிந்து விடுவார்கள் என்ற நினைப்பின் வலைக்குள் ராகுல் சிக்கி விடக்கூடாது.

ஏனென்றால் எனக்கு இதில் பெருத்த சந்தேகம் உள்ளது. மக்கள் பாஜகவையும், மோடியையும் அவ்வளவு விரைவில் தூக்கி எறியமாட்டார்கள்.

Modi_Rahul_UpdateNews360

மோடியின் வலிமை என்ன என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக அவருடைய இடத்துக்கு ராகுல் காந்தியால் ஒருபோதும் போட்டியிட முடியாது. அவரைத் தோற்கடிக்கவும் இயலாது.

நான் பார்த்தவரை பிரச்சினை என்னவென்றால், பெரும்பாலானோர் பிரதமர் மோடியின் பலத்தையும், அவர் பிரபலமாவதற்கு என்ன காரணம் என்பதை புரிந்துகொள்வதற்கும் போதுமான நேரத்தைச் செலவிடுவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை பாஜகவுக்கு மூன்றில் ஒரு பங்கு வாக்கு கிடைத்தாலே ஆட்சியைக் கைப்பற்றிவிடும். ஏனென்றால் மீதி இருக்கும் இரண்டு பங்கு ஓட்டுகளை நான்கைந்து சிறு தேசியக் கட்சிகளும் 10, 15 மாநில கட்சிகளும் கூறு போட்டு விடும்.

இப்படி ஓட்டுகள் பிரிவதற்கு காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிதான் காரணம். அக் கட்சிக்கு ஆதரவு சரியும்போது, 65 சதவீத வாக்குகளை சிறிய கட்சிகள் மற்றும் தனிநபர் சார்ந்த கட்சிகள் பிரித்துக்கொண்டு போய்விடும்” என்று குறிப்பிட்டார்.

பாஜகவை வீழ்த்த முடியாது

இதுபற்றி டெல்லியில் பாஜக மூத்த நிர்வாகிகள் கூறும்போது, “அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் கோவா பேச்சில் பல முக்கிய விஷயங்கள் தென்படுகின்றன. அதை மிகுந்த எச்சரிக்கையுடன் கவனிக்கிறோம். தேசிய அளவில் பாஜக 30 சதவீத வாக்கு வங்கியை வைத்திருப்பது பிரசாந்த் கிஷோரின் கண்களை உறுத்துகிறது. அதை அவர் எதிர்க்கட்சிகளுக்கு நாசுக்காக சுட்டிக்காட்டுகிறார்.

நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால், இன்னும் நாற்பது வருடங்களானலும் உங்களால் பாஜகவை வீழ்த்த முடியாது, இப்போதே ஒன்று சேர்வதுதான் புத்திசாலித்தனம் என்று அவர்களுக்கு மறைமுக எச்சரிக்கையும் விடுக்கிறார்.

பெட்ரோல் டீசல், விலை உயர்வு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற போதிலும் கூட விரைவில் அவற்றின் விலையை குறைக்க மத்திய பாஜக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. எனவே பெட்ரோல் டீசல், விலை உயர்வு தொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறும் கருத்தும் எங்களுக்குச் அறிவுரை சொல்வது போலத்தான் உள்ளது.

modi - updatenews360

அதேபோல் ராகுல் காந்திக்கு அவர் கூறும் அட்வைஸ் மாநிலக் கட்சிகளுடன் அனுசரித்து செல்லுங்கள் மத்தியில் பாஜகவுடன் மோதிப் பார்த்து விடுவோம் என்று கூறுவது மாதிரி இருக்கிறது.

ஏனென்றால் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. அதற்குள் எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து விடவேண்டும். அதற்கான காலம் கடந்து விடவில்லை; இன்னும் அவகாசம் இருக்கிறது, என்பதற்காகவே பிரசாந்த் கிஷோர் இப்படி பேசி இருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இல்லையென்றால் எதிர்கால கணிப்பு குறித்து இப்போதே அவர் இவ்வளவு ஆதங்கப்பட்டு பேசியிருக்க மாட்டார் என்பதும் நிஜம்.

Prashant-Kishor-PM-Rahul - updatenews360

இன்னொரு முக்கிய விஷயம், சட்டப்பேரவைத் தேர்தல்களில் பல அரசியல் கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்துக் கொடுத்து வெற்றி பெற வைத்ததுபோல நாடாளுமன்றத் தேர்தலில் செய்ய முடியாது என்பதை தனது பேச்சின் மூலம் பிரசாந்த் கிஷோர் ஒப்புக்கொண்டும் இருக்கிறார்.

இருந்தபோதிலும் அவருடைய பேச்சு எங்களை விழிப்படைய வைத்துள்ளது. இன்னும் பல பத்தாண்டுகள் அல்ல, பலநூறு பத்தாண்டுகள் நாட்டை பாஜக ஆட்சி செய்வதற்கு அவர் நல்ல வழிமுறைகளை கூறியிருக்கிறார் என்றே இதனை எடுத்துக் கொள்கிறோம்” என்று அந்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அரசியல் ஆர்வலர்கள் கூறுகையில், “எதிர்க்கட்சிகளை பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைக்க முடியவில்லையே? என்ற ஆதங்கம்தான் பிரசாந்த் கிஷோரின் முழு பேச்சிலும் தென்படுகிறது. அதனால்தான் பாஜகவை பூச்சாண்டி போல காண்பித்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க பார்க்கிறார். எனவே முதலில் விழிப்புடன் இருக்கவேண்டியது பாஜகதான்” என்றனர்.

Views: - 279

0

0