130 கோடி பேருக்கு தன்னம்பிக்கை என்ன என்பதை புரிய வைத்த இந்திய அணி: பிரதமர் மோடி பாராட்டு!
22 January 2021, 2:08 pmஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி வீரர்களின் மனநிலை 130 கோடி மக்களுக்கு ஒரு வாழ்க்கை பாடம் என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2 – 1 என கைப்பற்றி சரித்திரம் படைத்தது. 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிலிருந்து மீண்டு வந்து இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றியது பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மேலும் 32 ஆண்டுகளாக தகர்க்க முடியாத கோட்டை என்ன சொல்லிக்கொண்ட ஆஸ்திரேலிய அணியின் காபா மைதானத்திலேயே அந்த அணியை வீழ்த்தி இந்திய அணி பெற்ற வெற்றி இதை மேலும் சிறப்பானதாக மாற்றியது.
இதை இந்திய அணி வீரர்களும் ரசிகர்களும் மிகச் சிறப்பாக தற்போது கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான ஆட்டத்தை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், “அனைவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை மிகவும் நெருக்கமாக கவனித்து வந்தனர். இந்த தொடரில் இந்திய அணி சந்தித்த சவால்கள் மிகப் பெரியது. மிகப் பெரிய இழப்புகளை எதிர்கொண்டது. அதிலிருந்து மீண்டு வந்து வெற்றியும் கண்டது. நமது வீரர்கள் காயம் அடைந்த போதும் போட்டியை சிறப்பாக காப்பாற்றினார்.
சவால்களை தைரியமாக எதிர்கொண்டனர். பிரச்சினைகளுக்கு புதுவிதமான தீர்வுகளை கண்டறிந்தனர். சிலருக்கு அனுபவம் இல்லாத போதும் அவர்களின் உறுதியான ஆட்டம் பாராட்டும் வகையில் இருந்தது. ஒரு வாய்ப்பு கிடைத்த போது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு அவர்கள் வரலாறு படைத்தனர். ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த கோட்டையிலேயே வீழ்த்தி புது சரித்திரமும் படைத்துள்ளனர். இதுதான் இவர்களின் மிகப் பெரிய பலமே. இது அவர்களின் மன உறுதியைக் காட்டுகிறது. இது தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்த அவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற வெற்றியை வெறும் விளையாட்டாக மட்டும் பார்க்காமல் இது வாழ்க்கைக்கான பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முதல் பாடம் நமக்கு தன்னம்பிக்கை வேண்டும். நமது தகுதியை நாம் நம்ப வேண்டும். இரண்டாவது அதற்கான மனநிலையை வைத்துக் கொள்ள வேண்டும். அதே மன உறுதியோடு நேர்மறையான மனநிலையுடன் செயல்பட்டால் முடிவுகளும் சாதகமானதாக இருக்கும். வெற்றிக்காக முயற்சித்து முயற்சித்து தோல்வியை எதிர் கொண்டாலும் நமக்கு நமது எதுவும் இழப்பு இல்லை.
ஒவ்வொரு சோதனையின் போதும் ரிஸ்க் எடுப்பது மிகவும் முக்கியமானது. தைரியமாகவும், துணிச்சலுடனும் போராட வேண்டியது மிகவும் அவசியம்”என்றார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின்னர் கேப்டன் கோலி இல்லாத நிலையில் துணை கேப்டனாக இருந்த ரஹானே கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவருடன் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இணைந்து தோல்விக்கான காரணங்களை பொறுமையாக ஆராய்ந்து, நிதானமாக சிந்தித்து தவறுகளை திருத்திக் கொண்டு சரியான வீரர்களை, சரியாக பயன்படுத்திக் கொண்டு இந்திய அணி இந்த சரித்திர சாதனை படைக்க மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளனர்.
0
0