பணத்தை பறிக்க போலீஸ் வேடம் : ரூ. 45 லட்சத்தை கொள்ளையடித்த பலே கும்பல் கைது!!!

15 July 2021, 5:53 pm
Quick Share

ஆந்திர: சித்தூர் அருகே பணம் மாற்றி தருவதாக கூறி நாற்பத்தி ஐந்து லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளைக் கும்பல் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் நகர காவல் நிலையத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அசோகன் என்பவர் இந்த மாதம் இரண்டாம் தேதி புகார் ஒன்றை அளித்தார். இதில் மாந்தோப்பு வாங்குவதற்காக 45 லட்ச ரூபாயுடன் சித்தூர் வந்ததாகவும் அதனை இடை மறித்து ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றதாக புகார் அளித்தார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் வியாபாரம் நடத்தி வருவதாகவும் நண்பர் ஒருவர் மூலமாக கோயம்புத்தூரில் தொழிலதிபர் ஒருவர் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக வைத்துள்ளதாகவும் கூடிய விரைவில் 2000 ரூபாய் நோட்டு நிறுத்தப்பட உள்ளதாகவும் அதனை 500 ரூபாய் நோட்டுகளாக மாற்றி கொடுத்தால் 10% கமிஷன் தருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பி அசோகன் 45 லட்ச ரூபாய் 500 ரூபாய் படத்தை தயார் செய்த நிலையில் இதுகுறித்து நண்பன் சாய் கிருஷ்ணாக்கு தெரிவித்துள்ளார். சாய் கிருஷ்ணாவின் அறிவுறுத்தலின்படி வேலூர் வந்த அசோகன் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். மேலும் சாய் கிருஷ்ணா தொடர்பு கொண்டபோது பணத்தை இங்கு மாற்ற வேண்டாம் சித்தூர் வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு இடத்தில் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அசோகன் அவர்கள் தெரிவித்த இடத்திற்கு சென்றார். அங்கு நண்பர்களுடன் வந்த சாய் கிருஷ்ணா பணத்தை மாற்றும்போது சாய் கிருஷ்ணாவின் ஏற்கனவே திட்டமிட்டபடி அங்கு ஒரு போலீஸ் வாகனம் வந்தது. அதில் மூன்று போலீசார் யார் என்று விசாரித்துக் கொண்டிருக்கும் நிலையில் சாய் கிருஷ்ணா பணத்தை எடுத்துக் கொண்டு காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.

இதனை பார்த்த போலீசார் சாய் கிருஷ்ணா விரட்டுவது போல் அவர்களும் சென்றுவிட்டனர். பணத்தை பறிகொடுத்த அசோகன் செய்வதறியாமல் இதை போலீசாரிடம் கூறினால் தாமும் மாட்டிக்கொள்வோம் என்பதற்காக மாந்தோப்பு வாங்குவதற்காக வந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர் இந்நிலையில் அதே சித்தூர் வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனையின் போது சாய் கிருஷ்ணாவை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் மீதமுள்ள 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 32 லட்ச ரூபாய் பணம், தமிழக போலீசார் உடைகள், லத்திகள், இரண்டு நாட்டு துப்பாக்கி 6 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இவர்கள் மீது வேறு எங்கும் வழக்குகள் உள்ளதா போன்ற கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 171

0

0