உத்தரபிரதேசத்தில் அரசு தொழிற்சாலையில் கோவாக்சின் உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி..! மாதம் 2 கோடி டோஸ்கள் தயாரிக்க திட்டம்..!

12 May 2021, 3:55 pm
Covaxin_UpdateNews360
Quick Share

கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியின் உற்பத்தி விரைவில் உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷாரில் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கோவாக்சின் என்பது ஒரு உள்நாட்டு தடுப்பூசி ஆகும். இது ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனமான பாரத் பயோடெக் தயாரிக்கிறது.

பாரத் இம்யூனாலஜிகல்ஸ் அண்ட் பயோலாஜிக்கல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிஐசிஓஎல்) எனும் நிறுவனத்தின் புலந்த்சர் ஆலையில் கோவாக்சின் உற்பத்திக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது ஒவ்வொரு மாதமும் 2 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்யும்.

பிபிஐசிஓஎல் என்பது அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது 1989’இல் புலந்த்ஷாஹரில் நிறுவப்பட்டது. இது வாய்வழி போலியோ தடுப்பூசிகள் மற்றும் பிற நோய்த்தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்கிறது.

கோவாக்சின் உற்பத்தியாளர் பாரத் பயோடெக் மற்றும் பிபிசிஓஎல் ஆகியவை புலந்த்ஷாஹர் ஆலையில் தடுப்பூசி தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இங்கு கோவாக்சின் உற்பத்திக்கு சுகாதார அமைச்சகம் ரூ 30 கோடி நிதி உதவி வழங்கும்.

பிபிஐசிஓஎல் அதன் தற்போதைய உதிரி திறனுடன் கோவாக்சின் தயாரிக்கும். உற்பத்தி உடனடியாக தொடங்கும். அரசாங்க உத்தரவுகளின்படி கோவாக்சின் தயாரிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று நிறுவனம் முன்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள வசதிகளுடன் நிறுவனம் ஆண்டுக்கு 6 கோடி டோஸ் போலியோ தடுப்பூசி தயாரிக்க முடியும். தவிர,பிபிஐசிஓஎல் துத்தநாகம் சத்து மாத்திரைகள் மற்றும் வயிற்றுப்போக்கு மேலாண்மை கருவிகளையும் தயாரிக்கிறது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகளின் உற்பத்தியை துரிதப்படுத்த மற்ற தடுப்பூசி தயாரிப்பாளர்களை அரசாங்கம் அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஏப்ரல் மாதத்தில், தொழில்நுட்ப பரிமாற்றத்தின் அடிப்படையில் கோவாக்சின் தயாரிக்க மும்பையின் ஹாஃப்கின் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

Views: - 147

0

0