காதலர் தினத்திற்காக அலங்கரிக்கப்பட்ட ஓட்டல் : கடுப்பான இந்து முன்னணி!அலங்கோலமாக்கிய சோகம்..!

14 February 2020, 1:32 pm
pondicherry lovers day - updatenews360
Quick Share

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் தனக்கு பிடித்தவர்களிடம், பிடித்தமான இடத்தில் வைத்து பரிசுகளை வழங்கி, தங்களது காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்காக, ஓட்டல்கள், மால்கள் என காதலர்கள் அதிகம் வரும் இடங்கள் அனைத்தும், காதல் கோட்டைகள் போல அலங்காரம் செய்யப்பட்டு, ஜொலித்து வருகின்றன.

ஆனால், காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், வழக்கமாக காதலர்கள் கூடும் பூங்கா, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் இன்றைய தினம் காதலர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி மாநிலம் காமராஜர் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் காதலர் தினத்தையொட்டி, ஹார்ட் வடிவிலான பலூன்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், காதலர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டிருந்தன. இதையறிந்த 20-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர், சம்பந்தப்பட்ட ஓட்டலை முற்றுகையிட்டனர்.

அப்போது, அந்த ஓட்டலுக்கு காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த பொருட்களை எல்லைம் அடித்து சேதப்படுத்தினர். மேலும், ஓட்டல் மேலாளருக்கு மிரட்டல் விடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர்கள் அதிகம் சுற்றுலாவிற்கு வரும் புதுச்சேரி மாநிலத்தில், காதலர் தினத்தை கொண்டாட வந்தவர்களுக்கு, இந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலர் தினத்தையொட்டி புதுச்சேரி பாரதி பூங்கா மற்றும் கடற்கரை, தாவரவியல் பூங்கா, உசுட்டேரி, பாரடைஸ் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு வந்த காதலர்கள் பூங்கொத்து கொடுத்து வழக்கமான உற்சாகத்துடன் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தை கொண்டாடி வந்த காதலர்களுக்கு தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.