திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டுக்காக சென்றபோது ஆற்றில் மூழ்கி திருமண ஜோடி பலி..!

10 November 2020, 1:25 pm
wedding_updatenews360
Quick Share

கர்நாடகாவில் விரைவில் திருமணம் நடக்கவிருந்த ஜோடி, தங்களின் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டுக்காக, ​​நரசிபுராவின் தலகாடு சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தனர்.

இறந்தவர்கள் மைசூருவின் புறநகரில் உள்ள கோவில் நகரமான திருமுகடலு நரசிபுராவில் உள்ள கியதமரனஹள்ளியைச் சேர்ந்த 28 வயதான சந்துரு மற்றும் 20 வயதான சசிகலா என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

காவிரி நதியின் தோற்றம் மற்றும் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டுக்காக திருமுகடலு நரசிபுராவிலிருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள தலகாடுக்கு தம்பதியினர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒரு புகைப்படக்காரருடன் பயணம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த ஜோடிக்கு நவம்பர் 22’ஆம் தேதி திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. புகழ்பெற்ற டைட்டானிக் போஸ் மற்றும் உட்கார்ந்திருக்கும் போஸ் என பல கோணங்களில் புகைப்படத்தை எடுக்க அந்த ஜோடி விரும்பியுள்ளது.

“அவர்கள் உட்கார்ந்திருந்தபோது, ​​அண்மையில் பெய்த மழையின் காரணமாக நீரின் ஓட்டம் ஒப்பீட்டளவில் வலுவாக இருந்தது. இதன் விளைவாக, அவர்கள் அமர்ந்திருந்த படகு கட்டுப்பாட்டை இழந்த நிலையில் திருமண ஜோடி, அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களது கண் முன்னே நீரில் மூழ்கியது என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

பின்னர் படகிலிருந்த மற்றவர்கள் ஒருவழியாக போராடி படகோடு கரை சேர்ந்துள்ளனர்.

இதையடுத்து நீரில் மூழ்கியவர்களின் உடல்களை அங்கு மீன் பிடிக்கும் மீனவர்கள் மற்றும் தீயணைப்புத் துறை ஊழியர்களின் உதவியுடன் காவல்துறை மீட்டது.

திருமணம் நடக்கவிருந்த ஒரு ஜோடி, போட்டோஷூட்டுக்காக சென்று எதிர்பாராதவிதமாக உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 21

0

0