ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்று வரலாறு படைத்தார் பி.வி.சிந்து: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து..!!

Author: Aarthi Sivakumar
2 August 2021, 9:40 am
Quick Share

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று பி.வி.சிந்து புதிய சாதனை படைத்து உள்ளார்.

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டியின் 2வது நாளில் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு புகழ் சேர்த்தார்.


குத்துச்சண்டையில் பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா அரைஇறுதிக்கு முன்னேறி குறைந்தது வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறார்.இந்த வரிசையில் தற்போது இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இணைந்துள்ளார்.

பேட்மிண்டனில் அரைஇறுதியில் தோல்வி அடைந்த இந்திய வீராங்கனையும், உலக சாம்பியனும் தரவரிசையில் 7வது இடம் வகிக்கும் பி.வி.சிந்து, நேற்று நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் 9ம் நிலை வீராங்கனை ஹி பிங் ஜியாவை எதிர்கொண்டார். இதில் ஆக்ரோஷமாக ஆடிய பி.வி.சிந்து தொடக்கம் முதலே மளமளவென புள்ளிகளை திரட்டி முன்னிலை வகித்தார்.

10 புள்ளியை கடந்த பிறகு தனது முன்னிலையை வலுப்படுத்திய சிந்து அதன் பிறகு எதிராளியின் கை ஓங்க விடாமல் பார்த்துக்கொண்டார். ஒரு முறை 34 ஷாட்டுகள் இடைவிடாமல் விளாசி பரவசப்படுத்தினர். பந்தை வலைக்கு அருகே லாவகமாக தட்டிவிடுவதில் சற்று தவறிழைத்த சிந்து, அதை அதிரடியான ஷாட்டுகள் மூலம் ஈடுபடுத்திக்கொண்டு முதல் செட்டை வசப்படுத்தினார்.

அதே உத்வேகத்துடன் 2வது செட்டிலும் வரிந்துகட்டிய சிந்து, எதிராளியின் பதற்றத்தை சரியாக பயன்படுத்தி இந்த செட்டையும் கைப்பற்றி அசத்தினார்.53 நிமிடம் நீடித்தவிறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் பி.வி.சிந்து 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ஹி பிங் ஜியாவை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சரித்திர சாதனையை நிகழ்த்தினார். அவர் ஏற்கனவே 2016ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார்.

ramnath kovindth - updatenews360

பி.வி.சிந்துவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெறும் சிந்து, தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துதல், அர்ப்பணிப்பு, சிறப்புமிக்க செயல்பாடு ஆகியவற்றில் புதிய அளவுகோலை நிர்ணயித்துள்ளார். தேசத்துக்கு வெற்றியை தேடித்தந்துள்ள சிந்துவுக்கு இதயபூர்வமான வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில், ‘சிந்துவின் அற்புதமான செயல்பாட்டின் மூலம் நாங்கள் அனைவரும் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளோம். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவர் இந்தியாவின் கவுரவம். நமது ஒலிம்பியன்களில் தலைச்சிறந்தவர்களில் அவரும் ஒருவர்’ என்று மெச்சியுள்ளார்.

Modi Award - Updatenews360

‘இந்தியாவுக்காக 2-வது பதக்கம் வென்ற சிந்துவுக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கூறியுள்ளார். இதே போல் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், அனுராக் தாக்குர், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Views: - 409

0

0