முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை…!!

23 November 2020, 9:19 am
edapadi nd modi - updatenews360
Quick Share

சென்னை: கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவசர சிகிச்சைகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தைப் பயன்படுத்துவது குறித்தான சாத்தியக் கூறுகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்கும்போது விரைவாகவும் திறம்படவும் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்தை விநியோகிப்பது தொடர்பாக நாளையும், நாளைமறுநாளும் அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்தை யாருக்கு எப்படி பயன்படுத்துவது என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் ஆலோசனைகளை வழங்க உள்ளார். முதல் நாளில் எட்டு மாநில முதலமைச்சர்கள் ஆலோசனையில் கலந்துக் கொள்கின்றனர். இரண்டாவது நாளில் எஞ்சிய மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

தேசிய தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சில நாட்களாக 50,000 க்கும் குறைவாகவே இருந்தபோதிலும், பல நகரங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகின்றன. இதன் விளைவாக சில நகரங்களில் ஊரடங்கு உத்தரவு உட்பட பல நடவடிக்கைகளை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருந்தாலும், நாளைய ஆலோசனையில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Views: - 0

0

0