அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள்: பிரதமர் மோடி

Author: Udhayakumar Raman
9 September 2021, 11:26 pm
Quick Share

பிரிக்ஸ் கூட்டமைப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு மேலும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்‘ கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. 2012 மற்றும் 2016-ம் ஆண்டுக்கு பிறகு 3-வது முறையாக இந்த ஆண்டின் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தியது. ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிரிக்ஸ் அமைப்பிற்கு தலைமை ஏற்றது முதல் இந்தியாவிற்கு, பிரிக்ஸ் அமைப்பில் இருந்து முழு ஒத்துழைப்பு கிடைத்ததாக தெரிவித்தார். தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை திட்டத்தை பிரிக்ஸ் ஏற்று கொண்டுள்ளதாகவும், இன்றைய கூட்டம், பிரிக்ஸ் அமைப்பின் எதிர்காலத்திற்கு உகந்ததாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த 15 ஆண்டுகளில், பிரிக்ஸ் அமைப்பு அதிக முடிவுகள் தருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இந்த ஆண்டு கோவிட் காலகட்டத்திலும் பிரிக்ஸ் கூட்டங்கள் மற்றும் அதன் சார்ந்த நிகழ்வுகள் என 150 நிகழ்ச்சிகள் நடந்துள்ளதாகவும் அவர் கூறினார். அதில் 20 கூட்டங்கள் அமைச்சர்கள் மட்டத்தில் நடத்துள்ளதாகவும், பிரிக்ஸ் திட்டங்களை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.இதற்கிடையே, இந்த மாநாட்டில், ஆப்கன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டன. அப்போது பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டது, புதிய நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதாக தெரிவித்தார்.

இது உலகளாவிய மற்றும் பிராந்திய பாதுகாப்பை எவ்வாறு பாதிக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்ட அவர், போதை மருந்து கடத்தல், தீவிரவாதம் போன்ற விவகாரங்கள் காரணமாக, அண்டை நாடுகளுக்கு ஆப்கானிஸ்தான் அச்சுறுத்தலாக மாறக்கூடாரு என்றும் அவர் தெரிவித்தார். இந்த மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரேசில் அதிபர் போல்சனாரோ, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமாபோசா, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 152

0

0