அசாம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் டான்ஸ் ஆடி மகிழ்ந்த பிரியங்கா! வைரல் வீடியோ

3 March 2021, 8:05 am
Quick Share

சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக அசாம் சென்றிருக்கும் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, அங்கு தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன், பாரம்பரிய ஜூமுர் டான்ஸ் ஆடி மகிழ்ந்தார். மேலும் அவர்களுடன் தேயிலை பறித்தும் மகிழ்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக வீடியோவும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அசாம் தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அங்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு காமக்யா கோவிலில் வழிபாடு நடத்திய பிரியங்கா, தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். பிஸ்வநாத் மாவட்டத்தில் தேயிலை பறிக்கும் பெண் தொழிலாளர்களுடன் சேர்ந்து தேயிலை பறிப்பில் அவர் ஈடுபட்டார்.

இந்நிலையில், தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து பிரியங்கா நடனமாடும் வீடியோ வைரலாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளம் வெளியிட்ட பதிவில், தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து, அசாம் மக்களின் பாரம்பரிய நடனமான ஜூமுர் டான்ஸ் ஆடி மகிழ்ந்திருக்கிறார். அப்போது கழுத்தில் ‘காமோசா’ அணிந்திருந்தார்.

ஜூமுர் நடனம், பழங்குடியின தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பாரம்பரிய நடனம். இலையுதிர் காலத்தில், வயல்வெளி அல்லது மரத்தின் கீழ், திறந்தவெளியில் இந்த நடனத்தை ஆடுவார்கள். ஆண்கள் இசைக்கருவிகளை வாசிக்க, பெண்கள், நடனம் ஆடி மகிழ்வர். பிரியங்காவின் நடன வீடியோவை இதுவரை 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக்ஸ்களை குவிக்க, இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

Views: - 5

0

0