இலுப்பை பூவில் இருந்து மது தயாரிக்கும் திட்டம்: மத்திய பிரதேச அரசின் புது ஐடியா…எதிர்க்கும் எதிர்க்கட்சி..!!

Author: Aarthi Sivakumar
25 November 2021, 12:23 pm
Quick Share

மத்திய பிரதேசம்: இலுப்பை பூவில் இருந்து பாரம்பரிய மதுபானம் தயாரித்து விற்பனை செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் மாண்ட்லாவில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க மூத்த தலைவரும், மாநில முதலமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின மக்கள் பாராம்பரிய முறைப்படி இலுப்பை பூவில் இருந்து மதுபானம் தயாரிக்கின்றனர்.

புதிய கலால் கொள்கையின்படி இலுப்பை பூவில் இருந்து மதுபானம் தயாரிப்பது, இனி சட்டவிரோதம் ஆகாது. எனவே, இலுப்பை பூவில் இருந்து மது தயாரிக்கப்படுவதை பாரம்பரிய மதுபானம் என மதுக்கடைகளில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பும், வருமானமும் அதிகரிக்கும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார். முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா கூறியதாவது, கள்ளச்சாராயம் குடித்து சமீபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அப்படி இருக்கும் நிலையில், இலுப்பை பூவில் இருந்து தயாரிக்கப்படும் மதுவை சட்டபூர்வமாக்கும் அரசின் முடிவு துரதிர்ஷ்டவசமானது.

இதை பா.ஜ.,வின் தார்மீக வீழ்ச்சியாகவே கருத வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Views: - 197

0

0