மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசிய அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்..! போலீஸ் வழக்குப்பதிவு..!
3 February 2021, 10:49 amமகாராஷ்டிரா மாநிலத்தின் புனேவில் எல்கர் பரிஷத் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை தொடர்பாக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஷர்ஜீல் உஸ்மானி மீது புனே நகர காவல்துறை எஃப்.ஐ.ஆர்.பதிவு செய்துள்ளது. எல்கர் பரிஷத் மாநாடு கடந்த ஜனவரி 30’ஆம் தேதி புனே நகரில் நடந்தது.
புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா சியாட், ஐபிசியின் பிரிவு 153 (ஏ) இன் கீழ் மதம் குறித்து பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்ததற்காக அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் உள்ளூர் தலைவர் பிரதீப் கவாடே, உஸ்மானிக்கு எதிராக ஸ்வர்கேட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஷர்ஜீல் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும் கவாடே குற்றம் சாட்டினார். மேலும் விசாரணை நடந்து வருகிறது என குப்தா மேலும் கூறினார்.
பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய், ஓய்வு பெற்ற நீதிபதி பி.ஜி. கோல்ஸ் பாட்டீல் மற்றும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி எஸ்.எம். முஷ்ரிப் மற்றும் பலர் இந்த மாநாட்டில் உரையாற்றினர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 2017 எல்கர் பரிஷத் மாநாட்டையும், மறுநாள் பீமா கோரேகான் போர் நினைவிடத்தில் நடந்த சாதி வன்முறையையும் தொடர்ந்து பல இடதுசாரி ஆர்வலர்கள் நக்சல் தொடர்புகள் இருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உஸ்மானிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார். அவர் இந்து சமூகத்தின் உணர்வுகளை அவமதித்தார் என்று குற்றம் சாட்டினார். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்ட அவர் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
“ஒரு நபர் மகாராஷ்டிராவில் வந்து, உணர்வுகளை அவமதித்து, எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ளாமல் தனது சொந்த மாநிலத்திற்குத் திரும்புகிறார். அவருக்கு எதிராக மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறினால், அரசாங்கம் உஸ்மானியின் பின்னால் இருப்பதாக நாங்கள் கருதுவோம்” என்று ஃபட்னாவிஸ் கூறினார்.
இந்நிலையில், புனே காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
0
0