காங்கிரஸை வீழ்த்தி முதல்முறையாக ஆட்சியைப் பிடிக்கும் ஆம்ஆத்மி.. பஞ்சாப்பில் ஜிலேபியுடன் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டம்…!!

Author: Babu Lakshmanan
10 March 2022, 11:55 am
Quick Share

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆம்ஆத்மி முதல்முறையாக ஆட்சியை பிடிக்கிறது.

117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு கடந்த பிப்ரவரி 20ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில், ஆளும் காங்கிரஸை வீழ்த்தி ஆம்ஆத்மி முதன்முறையாக ஆட்சியைப் பிடிக்க இருக்கிறது. ஆம்ஆத்மி 90இடங்களில் முன்னிலைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி வெறும் 13 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. காங்கிரஸின் இந்தப் படுதோல்விக்கு காரணம், அக்கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல்களே ஆகும். வேளாண் சட்டம் கொண்டு வந்த எதிர்ப்பின் காரணமாக பாஜக 5 இடங்களிலும் மட்டுமே முன்னிலையில் உள்ளது. சிரோண்மனி அகாலி தளம் 9 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகர் சோனுசூட்டின் தங்கை மாள்விகா முன்னிலையில் உள்ளார். பஞ்சாப்பின் முதலமைச்சர் சரண்ஜித் சிங் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார். அதேபோல, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவும் பின்னடைவை சந்தித்தள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மன் 16,787 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். முதல்முறையாக பஞ்சாப்பில் ஆம்ஆத்மி ஆட்சியமைக்க உள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் ஜிலேபி வழங்கி வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

Views: - 344

0

0