சட்டமன்ற தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் : தேர்தல் ஆணையத்திற்கு பாஜக கடிதம்
Author: kavin kumar16 January 2022, 11:08 pm
பஞ்சாப் மாநில தேர்தலை தள்ளி வைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு பாஜக கடிதம் எழுதியுள்ளது
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநில சட்டமன்றத்துக்கு வருகிற பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என பஞ்சாப் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. விவசாயிகள் போராட்டம், பிரதமர் மோடி பாதுகாப்பு விவகாரம், காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட சலசலப்பு, கேப்டன் அமரீந்தர் சிங் புதுக்கட்சி ஆரம்பித்து பாஜகவுடன் கூட்டணி போன்ற விஷயங்கள் பஞ்சாப் தேர்தல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன.
இந்நிலையில், இந்த தேர்தல் தேதியை தள்ளி வைக்கவேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு, பஞ்சாப் மாநில பா.ஜ.க. கடிதம் எழுதியுள்ளது. அதில் பா.ஜ.க. கூறியதாவது:குரு ரவிதாஸின் பிறந்தநாள் பிப்ரவரி 16ம் தேதி வருகிறது. மாநிலத்தின் 32 சதவீத மக்கள் தொகை கொண்ட பட்டியல் சாதியைச் சேர்ந்த சில பிரதிநிதிகள் பிப்ரவரி 10 முதல் 16 வரை உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரசுக்கு செல்வார்கள். அத்தகைய சூழ்நிலையில், இந்த சமூகத்தைச் சேர்ந்த பலர் மாநில சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியாது. வாக்களிப்பது அவர்களின் அரசியலமைப்பு உரிமை. அவர்களும் சட்டசபைத் தேர்தலில் பங்கேற்பதற்காக தேர்தல் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஏற்கனவே, முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் பஞ்சாப் தலைவர் ஜஸ்விர் சிங் கர்ஹியும் ஆகியோர் தேர்தல் தேதியை மாற்றுமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0