காங்கிரஸின் ஆட்டத்தை முடிக்கும் சித்து..? விழிபிதுங்கும் ராகுல், பிரியங்கா…! பஞ்சாப்பில் மெகா இன்னிங்ஸ் Close…!!!

Author: Babu Lakshmanan
24 September 2021, 6:50 pm
Sidhu - congress - updatenews360
Quick Share

50 ஆண்டுகளுக்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களை ஆட்சி செய்த காங்கிரஸ் வசம் தற்போது ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் என 3 மாநிலங்கள்தான் உள்ளன. அதுவும் இங்கு ஏகப்பட்ட சிக்கல்களுடன் தட்டுத்தடுமாறி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்தை பாஜக முன்வைத்தது. அதை உண்மை என்று நிரூபிக்கும் விதமாக நாளுக்குநாள் நாடு முழுவதும் காங்கிரஸ் தேய்ந்து வருவது கண்கூடாகவே தெரிகிறது. பாஜகவின் ஆசையை காங்கிரஸ் தலைவர்களே கச்சிதமாக நிறைவேற்றி வைத்து விடுவார்கள் போலிருக்கிறது.

சிக்ஸர் அடிக்கும் சித்து

அண்மையில் பஞ்சாப் மாநில காங்கிரசுக்குள் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியது. முதலமைச்சராக இருந்த அமரீந்தர் சிங்கிற்கு எதிராக அக்கட்சியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து போர்க்கொடி உயர்த்தினார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிக்குள் குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் பதவியிலிருந்து விலகும்படி அமரீந்தர் சிங்கிற்கு காங்கிரஸ் மேலிடம் கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால் வேறு வழியின்றி அவரும் ராஜினாமா செய்தார்.

Amarinder Singh - sidhu - updatenews360

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் கடந்த மார்ச் மாதம் தனது முதன்மை ஆலோசகராக, பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை, அமரீந்தர் சிங் நியமித்திருந்தார். 2022 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு வசதியாக பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழுவையும் அமரீந்தர் சிங்
ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார்.

அதன்பிறகு அவர், தனது ‘சித்து’ விளையாட்டை காட்ட ஆரம்பித்தார். அமரீந்தர்சிங் மீதான அதிருப்தியை ஊதி ஊதிப் பெரிதாக்கினார். மேலும் கேபினட் அமைச்சர்களையே அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கவும் வைத்தார். கடைசியாக அமரீந்தர்சிங்கை மாற்றக் கோரி 50 எம்.எல்.ஏக்கள் கையெழுத்துப் போட்டு டெல்லி மேலிடத்துக்கு கடிதமும் கொடுத்தனர்.

79 வயது அமரீந்தர் சிங்கை 2022 தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தினால் அது பாஜக, சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்று கருதிய சித்து, காங்கிரஸ் மேலிடத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.

அமரீந்தருக்கு கல்தா

அமரீந்தர் சிங் பக்கம் சோனியாவும், சித்துவின் பக்கம் ராகுலும், பிரியங்காவும் நின்றதால் இந்த விவகாரம் ஜவ்வாக இழுத்துக்கொண்டே போனது. சித்து கிரிக்கெட் விளையாடிய காலத்தில் அவருடைய அதிரடி ஆட்டத்தை கண்டு ரசித்தவர், பிரியங்கா என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம்.

கடைசியில் ராகுல், பிரியங்கா இருவரின் கைகளும் ஓங்கியதால் அமரீந்தர் சிங் பதவிக்கு ஆப்பு வைக்கப்பட்டது. சித்துவின் தீவிர ஆதரவாளரான சரண்ஜித் சிங்கை காங்கிரஸ் மேலிடம் முதலமைச்சராக தேர்வு செய்யும்படி உத்தரவு பிறப்பித்தது.

பொதுவாக பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளில் முதலமைச்சர்கள் மாற்றப்பட்டால் பதவி இழந்தவர்கள் கட்சித் தலைமைக்கு எதிராக கடும் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் கூறமாட்டார்கள். ஏனென்றால் அதிகாரத்தை இழந்துவிட்ட கோபத்தில் இப்படி கொந்தளிக்கிறார்கள் என்ற தவறான எண்ணம் மக்களிடம் ஏற்பட்டு விடும் என்பதால் அமைதியாக ஒதுங்கிக் கொள்வார்கள்.

சித்துவுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு

ஆனால் பட்டியாலா மன்னர் பரம்பரையை சேர்ந்தவர் என்பதாலும், காங்கிரஸ் வளர்ச்சிக்காக தன்னை 40 ஆண்டுகள் அர்ப்பணித்துக் கொண்டவர் என்பதாலும் அமரீந்தர் சிங் இப்பிரச்சனையை எளிதில் விட்டுவிடவில்லை. அதுவும் சரண்ஜித் சிங், சட்டப்பேரவைத் தேர்தல் வரைதான் முதலமைச்சர் பதவியை வகிப்பார் என்பதையும், பின்னர் முதலமைச்சர் வேட்பாளராக சித்துதான் அறிவிக்கப்படுவார் என்பதையும் கேள்விப்பட்டு அவர் கொதிப்படைந்தார்.

ஏற்கனவே சித்து மீது பரவலாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மீண்டும் அடுக்கினார். அவர் கூறும்போது, “நவ்ஜோத்சிங் சித்து திறமையில்லாதவர். ஆளுமையற்றவர். அவரால் காங்கிரசுக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்பட போகிறது. சித்துவுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது. இந்த தொடர்பு தேசபாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவித் பாஜ்வா ஆகியோர் சித்துவின் நெருங்கிய நண்பர்கள். எனவேதான் அவரை கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க எதிர்ப்பு தெரிவிக்கிறேன். மேலும் என்னுடைய தேசத்தை பாதிக்கும் விவகாரம் என்பதால் சித்துவை கடுமையாக எதிர்க்கிறேன்.

சித்து ஒரு ஆபத்தான மனிதர். அவர் எந்தக்காலத்திலும் பஞ்சாப் முதலமைச்சராக வரக்கூடாது. அவர் அப்பதவியில் உட்காருவதை தடுக்க எந்த தியாகத்தையும் செய்வேன். முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டால் அவரை எதிர்த்து வலுவானதொரு வேட்பாளரை நிறுத்துவேன்”‘என்று சித்துவை கடுமையாக தாக்கிய அவர் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பிரியங்கா இருவரையும் ஒரு பிடி பிடித்தார்.

“என்னை கட்சியில் ரொம்பவே அவமானப்படுத்தி விட்டார்கள். மூத்த தலைவரான எனக்கே இப்படியொரு நிலை என்றால் தொண்டர்களின் கதி என்ன என்பது பற்றி சொல்ல வேண்டியதில்லை. பஞ்சாபை பொறுத்தவரை, தற்போது டெல்லியில் இருந்துதான் ஆட்சி நடத்தப்படு கிறது. ராகுலும், பிரியங்காவும் எனது குழந்தையை போன்றவர்கள். அவர்களின் சமீபத்திய நடவடிக்கைகளை பார்க்கும்போது, அவர்களுக்கு போதிய அரசியல் அனுபவம் இல்லை என்பது புரிகிறது. யாரோ சிலரால் அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்” என்றொரு பகீர் குற்றச்சாட்டையும் முன்வைத்தார். இதனால் காங்கிரஸ் மேலிடம் அதிர்ந்துபோய் உள்ளது.

வரும் தேர்தலில் அவரால் தோல்வி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அமரீந்தர் சிங்கின் கோபத்தை தணிக்க “கொஞ்சம் பொறுமையாக இருங்கள், உங்களுக்கு இதை விட பெரிய பதவி காத்திருக்கிறது” என்று காங்கிரஸ் மேலிடம் அவரிடம் சமரசம் பேசி வருகிறது. ஆனால் அமரீந்தர் சிங் அதற்குப் பணிந்து விடுவாரா? என்பது தெரியவில்லை.

சித்துவால் காங்., போல்டு

இதுகுறித்து டெல்லியில் அரசியல் விமர்சகர் கூறும்போது, “பாகிஸ்தானின் கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவுக்கு இந்தியர்கள் செல்ல 2019-ல் கர்தார்பூர் பாதை திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்தான் பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வாவை நவ்ஜோத்சிங்
சித்து ஆரத் தழுவி வாழ்த்து தெரிவித்தார். அப்போது அமைச்சர் என்ற முறையில் சித்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் சித்துவின் இலாகாவை அமரீந்தர்சிங் மாற்றினார். இதனால் கடுப்பாகிப்போன சித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

Sonia_Rahul_UpdateNews360

அமரீந்தர் சிங் நாட்டுப்பற்று மிக்கவர். நமது ராணுவத்தில் கேப்டனாகவும் பணியாற்றியவர். அதனால்தான் சித்துவின் இந்த செய்கை அவருக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. இந்த மோதல்தான் இருவருக்கும் இடையே பகைமை வளர்வதற்கான முக்கிய காரணம். அமரீந்தர் சிங் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய குடும்பத்திற்கு பஞ்சாப் மாநிலத்தில் தனி செல்வாக்கு உள்ளது. அதனால் அவர் புதிய கட்சி எதையும் தொடங்கி தலைவலியை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் மேலிடம் அவரிடம் சமாதானம் பேசி வருகிறது. என்றபோதிலும் 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாபில் காங்கிரஸ் தோற்பதற்கு சித்து காரணமாக இருப்பார் என்பது உறுதி.

ஏனென்றால் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை பஞ்சாபிலிருந்து விரட்டியடித்தது சித்துதான். அதைவிட முக்கியமான விஷயம்.12 ஆண்டுகள் பாஜகவில் சித்து எம்பியாக இருந்தார். அப்படிப்பட்ட ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ்காரர்கள் ஏற்பார்களா? என்பது சந்தேகம்தான். அதனால் பஞ்சாபில் காங்கிரசின் செல்வாக்கை தனது அரசியல் ஆட்டத்தின் மூலம் சித்து முடிவுக்கு கொண்டு வந்து விடுவார் என்றே சொல்லலாம்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 212

0

0