“ரயில் ரோகோ”..! நீடித்துச் செல்லும் விவசாயிகள் போராட்டம்..! முடிவுக்கு வருமா..?

26 September 2020, 1:01 pm
Punjab_Amritsar_farmers_protest_on_railway_tracks_UpdateNews360
Quick Share

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இயற்றிய விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டி அமிர்தசரஸில் தங்கள் ‘ரெயில் ரோகோ’ போராட்டம் மேலும் நீட்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

செப்டம்பர் 26’ஆம் தேதி முடிவடைய திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் 24 முதல் 26 வரை ஃபெரோஸ்பூர் பிரிவில் இருந்து இயங்கும் பல்வேறு சிறப்பு ரயில்களை ரயில்வே ரத்து செய்திருந்தது. ஆனால் அது மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழு குழு உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் போராட்டம் மேலும் வலுப்பெறும் என்றும், மசோதாக்களை திரும்பப் பெற அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் என்றும் கூறினார்.

“நாங்கள் கடந்த மூன்று நாட்களாக தேவிதாஸ்புராவில் இங்கு ஆர்ப்பாட்டம் செய்கிறோம். நாங்கள் காலையில் பிரார்த்தனை செய்கிறோம். தொடர்ந்து போராட்டத்தில் அமர்ந்திருக்கிறோம். இது செப்டம்பர் 29 வரை தொடரும். மசோதாக்களை ரத்து செய்யுமாறு நாங்கள் கோருகிறோம்.

எதிர்ப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மோடி அரசாங்கத்தின் ஆபத்தான விவசாய மசோதாக்களுக்கு எதிராக இங்கு ஏராளமானோர் வருகிறார்கள்.” என்று கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழுவின் அமிர்தசரஸ் பிரிவின் செயலாளர் குருச்சரன் சிங் சப்பா கூறினார்.

“பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட விவசாய மசோதாக்கள் மூலம் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே நன்மை பயக்கும் என்பதால் அவர்களுக்கு உதவும். இது மண்டி முறையை முடிவுக்குக் கொண்டுவரும்” என்று அவர் மேலும் கூறினார்.

கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பதாகையின் கீழ் போராட்டக்காரர்கள் ரயில் பாதைகளில் ஒரு கூடாரத்தை வைத்து ரயில் தடங்களை தடுத்துள்ளனர். அவர்கள் அரசாங்க எதிர்ப்பு கோஷங்களை எழுப்புகிறார்கள். அனைத்து விவசாய மசோதாக்களையும் திரும்பப் பெறக் கோருகின்றனர்.

குழுவின் மாநில பொதுச் செயலாளர் சர்வன் சிங் பாந்தர், “நாங்கள் பஞ்சாபின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு தெரிவிப்போம். இந்த ரெயில் ரோகோ போராட்டம் நாடு முழுவதும் தொடரும். இது இப்போது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த அனைவருக்கும் நன்றி. நிலைமையைப் பொறுத்து செப்டம்பர் 28 அன்று போராட்டத்தை நாங்கள் மறுஆய்வு செய்வோம். மசோதாவை திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை நாங்கள் கட்டாயப்படுத்துவோம்.” எனத் தெரிவித்தார்.

விவசாய சீர்திருத்த சட்டங்களுக்கு எதிரான இதேபோன்ற போராட்டங்கள் உத்தரபிரதேசம், ஹரியானா, ஒடிசா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றன.

இந்த மசோதாக்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மண்டிகளுக்கு வெளியே விளைபொருட்களை விற்க அனுமதிப்பதன் மூலமும், வேளாண் வணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதன் மூலமும், முக்கிய பொருட்களின் மீதான கட்டுப்பாட்டை அரசு தளர்த்துவதன் மூலமும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 9

0

0