திருக்குறள் மீது கொண்ட காதல்! 1330 குறளையும் பனை ஓலையில் பொறித்த சர்தார்ஜி

17 January 2021, 8:52 am
Quick Share

பஞ்சாபியான ஜஸ்வந்த் சிங்கிற்கு, திருவள்ளுவர் மீது கொண்ட மரியாதையும், திருக்குறள் மீது கொண்ட காதலும் காரணமாக அதை பரப்ப முடிவு செய்து, 1330 குறளையும் பனை ஓலையில் பொறித்து, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

ஆங்கில மோகம், பிற மொழி ஆதிக்கம், நகரமயமாகும் கலச்சாரங்களால், தமிழ் மொழியின் நிலைமை இனி என்ன ஆகும் என மொழி ஆர்வளர்கள் கவலை கொண்டிருக்கும் நிலையில், இது போன்ற சிலரின் சாதனைகள் தமிழ் இனிதான் மெல்ல வளரும் என்பதை உணர்த்துகிறது. பஞ்சாபியான இந்த சிங், அப்படி என்ன செய்து விட்டார் தெரியுமா?

பஞ்சாப்பை சேர்ந்த ஜஸ்வந்த் சிங் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். திருக்குறள் மீது கொண்ட காதலால், அதனை பரப்ப முடிவு செய்து, யோசித்த போது, அவருக்கு அருமையான யோசனை ஒன்று தோன்றியிருக்கிறது. கடந்த ஒன்றறை ஆண்டுகளுக்கு முன்பு, திருக்குறளின் 1,330 குறள்களையும், பனை ஓலைகளில் பொறிக்க அவர் முடிவு செய்து, அதற்கான பணியை துவங்கினார்.

எழுத்தாணிகளால் அதனை பனை ஓலைகளில் எழுத ஆரம்பித்த சிங், கடந்த சில நாட்களுக்கு முன் அதனை வெற்றிகரமாக முடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில், திருக்குறள் மீது கொண்ட தனது காதலை வெளிப்படுத்த, தனது தோட்டத்தில் உள்ள இரண்டு மரங்களில், திருவள்ளுவரின் உருவத்தை இவர் செதுக்கியிருந்தார்.

இதுகுறித்து ஜஸ்வந்த் சிங் கூறுகையில், ‘‘புனித புத்தகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது மதத்தைப் பற்றி பேசுகின்றன. ஆனால் திருக்குறள் மதச்சார்பற்று, பல விஷயங்களைப் பற்றி கூறுகிறது. திருக்குறளை உலக அறிஞர்கள் பலரும் போற்றுகின்றனர். 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும், அதன் கருத்துக்கள் இன்றும் பொருந்துகின்றன. திருக்குறள் குறித்த பெருமைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பி, இப்பணியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளேன்’’ என்றார்.

Views: - 10

0

0