ராகுல் பிரதமர் வேட்பாளரா…? ‘லொள்ளு’ லாலு வைத்த செக்…!

Author: Babu Lakshmanan
26 October 2021, 12:10 pm
Rahul - lalu - updatenews360
Quick Share

காங்கிரஸ் மலைபோல் நம்பி இருந்த கூட்டணி கட்சிகளில் ஒன்று, முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம்.

காங்., கூட்டணி

2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும்போது, பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் பேரம் பேசி எப்படியாவது 18 சீட்டுகளை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் மேலிடம் இருந்தது. கடந்தமுறை ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஒதுக்கிய 9 தொகுதிகளை விட இது இன்னொரு மடங்கு அதிகம் என்றாலும்கூட கட்சியின் தலைவர் லாலு பிரசாத்தை சரிக்கட்டி விடலாம் என்று உறுதியாக நம்பியது.

ஏனென்றால், பக்கத்து மாநிலமான மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரசால் கூட்டணி வைத்துக் கொள்ள முடியாது. அங்கு மம்தாவுக்கு பரம விரோதியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வைத்துக்கொண்டு கடும் சவாலை ஏற்படுத்தியதுதான்.

தமிழகத்திலும் கடந்த தேர்தலில் திமுக ஒதுக்கிய 9 நாடாளுமன்ற தொகுதிகள் அப்படியே கிடைக்குமா? என்பதும் சந்தேகம்தான். அதிகபட்சமாக 4 தொகுதிகள் கிடைக்கலாம் என்பது அரசியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

2022 உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரசுடன் கூட்டணி வைத்து கொள்ளுமா? என்பதும் கேள்விக்குறியே!

பஞ்சாப், கேரளா, சத்தீஷ்கர், ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் காங்கிரசுக்கு முன்புபோல வெற்றி கிடைக்குமா? என்பதும் சந்தேகத்துக்கிடமான நிலையிலேயே உள்ளது.

காலை வாரிய லாலு

இதனால்தான் மதிக்கத்தக்க கூட்டாளிகள் வரிசையில், லாலு பிரசாத் கட்சியை காங்கிரஸ் நம்பி இருந்தது. ஆனால் இப்படி திடீரென்று அவர் காலை வாரி விடுவார் என்று காங்கிரஸ் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

அப்படி என்னதான். ராஷ்ட்ரிய ஜனதாதளம் செய்தது?…. அது மிகவும் சுவாரசியமான விஷயம்.

Lalu Prasad -Updatenews360

பீகார் மாநிலத்தில் குசேஷ்வர் அஸ்தான் மற்றும் தாராப்பூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 30-ம் தேதி நடக்கிறது. இந்த இரு தொகுதிகளிலும் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி வைத்திருந்த காங்கிரசை கழற்றி விட்டு தனித்து களம் காண்கிறது. இதனால் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரசும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

குசேஷ்வர் அஸ்தான் தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதள வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டு 2-வது இடத்தை பிடித்திருந்தது, குறிப்பிடத்தக்கது. அப்படியிருந்தும் காங்கிரசுக்கு அந்தத் தொகுதியை ஒதுக்காமல் லாலு பிரசாத் கட்சி ஓரம் கட்டி விட்டது. இதனால் இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி சட்டென்று முறிந்து போனது.

ரகசிய ஒப்பந்தம்

இதுபற்றி செய்தியாளர்கள் 74 வயது லாலு பிரசாத்திடம் கேட்டபோது, “காங்கிரசுக்கு தொகுதியை விட்டுக் கொடுத்தால் அவர்கள் டெபாசிட்டை இழந்து விடுவார்கள். அதற்காகத்தான் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம்” என்று கிண்டலாக குறிப்பிட்டார்.

இதனால் எரிச்சலடைந்த பீகார் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சரண் தாஸ், “அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை தனித்துப் போட்டியிட வைக்கவேண்டும் என்பதற்காக ராஷ்டிரிய ஜனதா தளமும் பாஜகவும் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றன.
அதற்காகத்தான் இப்போதே ராஷ்ட்ரிய ஜனதா தளம் தனித்துப் போட்டியிடுகிறது.
” என்று குற்றம்சாட்டினார்.

இதைக் கேட்ட லாலுபிரசாத் கொதித்துப் போனார். “சரண் தாஸ் செயல்திறன் அற்றவர். 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு 70 தொகுதிகளை ஒதுக்கினோம். ஆனால் 17 இடங்களில்தான் வெற்றி பெற்றது. இதனால் தான் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான பாஜக கூட்டணி மயிரிழையில் வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்கி நாங்கள் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு இருந்தால், நிச்சயம் ஆட்சியை கைப்பற்றி இருப்போம். நிதிஷ்குமாரும் முதலமைச்சராகி இருக்க முடியாது” என்று சற்று நக்கலாக பதிலளித்தார்.

காங்கிரசுக்கு கல்தா

ஒருமுறை பீகார் மாநிலத்தின் ஆர்வால் நகரில் லாலு பிரசாத் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று மேடை சரிந்து விட்டது. இதனால் கட்சித் தொண்டர்கள் அவருக்கு என்ன ஆயிற்றோ? என்று அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் சுதாரித்து எழுந்த லாலு பிரசாத் என்னைப்போன்ற நல்லவர்களுக்கு, கெட்டது எதுவும் நடந்து விடாது என்று நகைச்சுவையாக கூறி தொண்டர்களை சிரிப்பலையில் ஆழ்த்தினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, “தற்போதைய பிரபலமான சினிமா நடிகர்களை விட நான் ஒன்றும் குறைந்தவன் அல்ல. என்னாலும் சினிமாவில் சிறப்பாக நடிக்க முடியும். நான் ஏற்கனவே ‘பத்மஸ்ரீ லாலுபிரசாத் யாதவ்’ என்ற படத்தில் சுனில் ஷெட்டியுடன் நடித்து இருக்கிறேன். எனது வாழ்க்கை வரலாறை வைத்து யாரும் படம் எடுக்க முன்வந்தால், அந்த படத்தில் நான் கதாநாயகனாக நடிக்க தயாராக இருக்கிறேன்” என்று ஒரு காமெடி சரவெடியை கொளுத்திப் போட்டார்.

lalu prasad yadav and congress: sonia gandhi aur lalu yadav ka rishta kitna  purana BJP की हेल्प से CM बनने वाले लालू यादव ने क्यों थामा कांग्रेस का  हाथ, सोनिया गांधी से

லாலு பிரசாத் இப்படி அடிக்கடி வேடிக்கையாக பேசக்கூடியவர் என்பதால் முதலில் காங்கிரஸ் அவருடைய விமர்சனத்தை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. எப்படியும் தாங்கள் போட்டியிட்ட தொகுதியை மீண்டும் தங்களுக்கே அவர் ஒதுக்கி விடுவார் என்றே நம்பினர். ஆனால் அவரோ, நான் சொன்னால் சொன்னதுதான் என்பதுபோல உறுதியாக இருந்துவிட்டார்.

இதனால் காங்கிரஸார் சோனியா, ராகுல் மூலம் லாலு பிரசாத்துக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். அப்போதுதான், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உண்மையிலேயே சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மட்டுமின்றி, நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரசை கழற்றி விட முடிவு செய்திருப்பது தெரிய வந்தது.

இதனால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளது.

இலவுகாத்த கிளி

ஆனால் பீகார் மாநில அரசியலை கரைத்துக் குடித்த எதிர்க்கட்சி தலைவர்களோ,” லாலு பிரசாத் வழக்கம்போல தனது தமாஷ் நாடகத்தை தொடங்கி விட்டார். அவரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் 2004-ல் மத்திய ரயில்வே அமைச்சராக நியமித்தது. அதையெல்லாம் அவர் மறந்து விட்டார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு மிகவும் குறைவான தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என்பதுதான் லாலுவின் திட்டம். பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை எதிர்த்து இடைத்தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெற்றி பெறாது. அதேபோல காங்கிரசுக்கும் டெபாசிட் கிடைக்காது என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

இந்த இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு டெபாசிட் கிடைக்கவில்லை என்றால் அதை சாக்காக வைத்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் 5 அல்லது அதற்கும் குறைவான தொகுதிகளைத்தான்
காங்கிரசுக்கு லாலு பிரசாத் ஒதுக்குவார். அதேநேரம் ராகுலை பிரதமர் வேட்பாளராக அவர் ஏற்கமாட்டார் என்பதும் உறுதி.

rahul_gandhi_updatenews360

அவருடைய ராஷ்டிரிய ஜனதா தளமும், உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சியும் 2024 தேர்தலில் இரு மாநிலங்களிலும் குறைந்தபட்சம் 90 தொகுதிகளை கைப்பற்றவேண்டும் என்ற நோக்கத்தில் இப்போதே திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.

அதனால் காங்கிரஸ் சார்பில் யார் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் சரி அவர்களை இந்த இரு கட்சிகளுமே ஆதரிக்கப் போவது இல்லை. திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதாதளம் ஆகியவை ஒருங்கிணைந்து பிரதமர் வேட்பாளராக ஒருவரை நிறுத்தும். அதற்காகத்தான் காங்கிரஸிடம் இருந்து லாலு பிரசாத் விலகியே நிற்கிறார்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

அப்போ 2024 தேர்தலிலும் ராகுல் இலவு காத்த கிளிதானா?….

Views: - 252

0

0