இந்திரா காந்தியின் அவசரநிலைப் பிரகடனம் மிகப்பெரிய தவறு..! ஒத்துக்கொண்ட ராகுல் காந்தி..!

3 March 2021, 12:49 pm
Rahul_Indira_UpdateNews360
Quick Share

1975’ஆம் ஆண்டில் தனது பாட்டியும் முன்னாள் இந்திய பிரதமருமான இந்திரா காந்தி விதித்த அவசரநிலை ஒரு தவறான செயல் என்றும், அடுத்த 21 மாதங்களில் நடந்தவை மிகப்பெரிய தவறு என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒப்புக் கொண்டார்.

அவசர காலங்களில் அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் இடைநிறுத்தப்பட்டபோது, ​​ஊடகங்கள் கடுமையாக தடைசெய்யப்பட்டன மற்றும் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்று ராகுல் காந்தி தெரிவித்தாலும், தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது அடிப்படையில் அவசரநிலை வேறுபட்டது என்றும் கூறினார்.

“அது ஒரு தவறு என்று நான் நினைக்கிறேன், நிச்சயமாக அது ஒரு தவறு தான். என் பாட்டி (இந்திரா காந்தி) அவ்வளவுதான் சொன்னார். ஆனால் காங்கிரஸ் எந்த நேரத்திலும் இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பைக் கைப்பற்ற முயற்சிக்கவில்லை. வெளிப்படையாக சொல்வதானால் அதற்கான திறன் கூட காங்கிரசிடம் இல்லை. காங்கிரசின் சித்தாந்தம் எங்களை அவ்வாறு செய்ய அனுமதிக்காது.” என்று அவர் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் கவுசிக் பாசுவுடன் ஒரு வீடியோ கான்பெரன்ஸ் உரையாடலின் போது கூறினார்.

இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய, நாட்டுக்கு அதன் அரசியலமைப்பைக் கொடுத்த, சமத்துவத்திற்காக நின்ற காங்கிரசில் தான் எப்போதும் உள் ஜனநாயகத்தை ஆதரிப்பதாக ராகுல் காந்தி கூறினார்.

எனினும் அவசரநிலை காலத்தில் பேச்சுரிமை மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்கள் மிகுதியாக உள்ள ஆளும் பாஜக, காங்கிரசை பலமுறை இதற்காக விமர்சித்துள்ளது. குறிப்பாக பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையை குறைப்பதாக இதே போன்ற குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வைக்கும்போது அவசரநிலை காலத்தை குறிப்பிட்டுள்ளது.

ஜூன் 2020 இல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காங்கிரஸ் மற்றும் சோனியா, ராகுல் உள்ளிட்ட காங்கிரசின் தலைமையை தொடர்ச்சியான ட்வீட்டுகளில் குறிவைத்து, “ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்கான பேராசை ஒரே இரவில் நாட்டை சிறையாக மாற்றியதாகக் கூறியிருந்தார். “பத்திரிகைகள், நீதிமன்றங்கள், சுதந்திரமான பேச்சு என அனைத்தும் காலில் போட்டு மிதிக்கப்பட்டன. ஏழைகள் மற்றும் நலிந்தவர்கள் மீது அட்டூழியங்கள் செய்யப்பட்டன.” என்று அமித் ஷா ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ்ஸை குறிவைக்கும் ராகுல் காந்தி :

எனினும், 1975’க்கும் 1977’க்கும் இடையில் என்ன நடந்தது என்பதற்கும் இன்று என்ன நடக்கிறது என்பதற்கும் ஒரு அடிப்படை வேறுபாடு இருப்பதாக ராகுல் காந்தி கூறினார். குறிப்பாக ஆர்எஸ்எஸ் அடிப்படையில் வேறுபட்டது என்றும் அது நாட்டின் நிறுவனங்களை அதன் அமைப்பைச் சேர்ந்தவர்களால் நிரப்புகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்தியப்பிரதேசத்தில் அரசாங்கம் அகற்றப்படுவதற்கு முன்னர், காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல் நாத் உடனான உரையாடலை ராகுல் காந்தி நினைவு கூர்ந்தார். மத்தியபிரதேச அரசாங்கத்தின் மூத்த அதிகாரத்துவத்தினர் ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்தவர்கள் என்பதால் தனது பேச்சைக் கேட்க மாட்டார்கள் என்று கமல்நாத் தெரிவித்ததாக ராகுல் காந்தி கூறினார்.

தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட்டாலும், அதிகார கட்டமைப்பில் இருந்து அவர்களை அகற்றுவது சாத்தியமில்லை என்று ராகுல் காந்தி மேலும் கூறினார்.

Views: - 1

0

0