ராஜஸ்தான் கோவில் பூசாரி எரிப்பு வழக்கு..! சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார் அசோக் கெலாட்..!

Author: Sekar
12 October 2020, 10:17 am
ashok_gehlot_updatenews360
Quick Share

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று கரௌலி மாவட்டத்தில் கோவில் பூசாரி தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் இரண்டு குடும்பங்களுக்கிடையிலான நிலப்பிரச்சனையில் பாஜக வகுப்புவாத சாயம் பூசுவதாக அவர் கண்டித்தார்.

“சபோத்தராவின் புக்னா கிராமத்தில் இரண்டு குடும்பங்களுக்கிடையில் நிலப்பிரச்சனை வழக்கில் மீனா மற்றும் வைஷ்ணவ் சமூகங்களுக்கு இடையிலான சோகமான சம்பவத்திற்கு பாஜக ஒரு வகுப்புவாத சாயம் பூசியது கண்டிக்கத்தக்கது. இது ராஜஸ்தானின் மதிப்பை தேவையின்றி குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது” என்று கெலாட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

பூசாரி மரணம் ஒரு சாதி மோதலின் விளைவாக இல்லை என்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சம்பவமும் அல்ல என்று அவர் கூறினார்.

ஒரு நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக இரு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு சோகமான சம்பவத்திற்கு வழிவகுத்தது என அவர் மேலும் கூறினார்.

இந்த சம்பவத்திற்கு ஒரு நாள் முன்பு அக்டோபர் 6’ஆம் தேதி, பூசாரி பாபு லால் வைஷ்ணவுக்கு ஆதரவாக பஞ்சாயத்து ஒப்புக் கொண்டது. இதில் மீனா சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) விகாஸ் சர்மாவுக்கு இந்த பணி வழங்கப்பட்டுள்ளது என்று ராஜஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூசாரிகள் மற்றும் பல்வேறு கோயில்களின் கீழ் வரும் நிலங்களுக்கு பாதுகாப்பு அளிக்க காங்கிரஸ் அரசு எப்போதும் முயற்சித்து வருகிறது என்று கெலாட் மேலும் கூறினார்.

நில தகராறு காரணமாக, கடந்த புதன்கிழமை வைஷ்ணவ் தீ வைத்து கொளுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் வியாழக்கிழமை எஸ்எம்எஸ் மருத்துவமனையில் இறந்தார். கோவிலுக்கு அருகிலுள்ள சாகுபடி நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற ஐந்து பேர், பெட்ரோல் தெளித்து பூசாரியை தீ வைத்து கொளுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு பக்கம் ராஜஸ்தான் முதல்வர் திரும்பத் திரும்ப இது இரு குடும்பங்களுக்கிடையேயான பிரச்சினை என பூசி மெழுகினாலும், வழக்கை எடுப்பதிலும், விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வதில் காட்டிய மெத்தனப்போக்கும் பல சந்தேகங்களுக்கு விதை போட்டுள்ளது.

Views: - 44

0

0