இப்பதான் பஞ்சாப்பில் முடிந்தது.. அதுக்குல்ல ராஜஸ்தானா… உட்கட்சி பூசலால் திண்டாடும் காங்கிரஸ்… சச்சின் பைலட்டால் மிரண்டுபோன சோனியா..!!

By: Babu
28 July 2021, 1:24 pm
sachin pilot - updatenews360
Quick Share

காங்கிரஸ் தலைமைக்கு ஏதாவது ஒரு மாநிலத்திலிருந்து புதுப்புது தலைவலி உருவாகிக் கொண்டே இருக்கிறது. அதுவும் அக்கட்சி ஆளும் மாநிலங்களிலேயே இந்த நெருக்கடி ஏற்படுவதுதான் வேடிக்கை.

பஞ்சாப்’ சித்துவால் பிரச்சனை

கடந்த வாரம் வரை பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக முஷ்டியை உயர்த்தி கொண்டிருந்தார், முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து.
“எனக்கு துணை முதலமைச்சர் பதவியெல்லாம் தேவையில்லை, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கொடுங்கள் போதும். இல்லையென்றால் ஆளை விடுங்கள்” என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.

இன்னொரு பக்கம், காங்கிரஸ் தலைமைக்கு மிரட்டல் விடுப்பது போல, ஆம் ஆத்மி கட்சியை புகழ்ந்து சில ட்விட் களையும் போட்டார். அவ்வளவுதான் காங்கிரஸ் ஆடிப்போனது.
இரண்டு வருடங்களாக சித்து வைத்திருந்த கோரிக்கையை உடனடியாக தூசிதட்டி எடுத்தது.

அவரை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்க முடிவு செய்தது. அதற்கு முதலமைச்சர் அமரீந்தர் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதையும் மீறி சித்து அதிரடியாக சிக்ஸர் அடித்ததுபோல் மாநிலத் தலைவர் பதவியை பெற்றுவிட்டார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பஞ்சாப் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை தனது முதன்மை செயலாளராக நியமித்திருந்தார், அமரீந்தர் சிங். ஆனால், அவர் காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

எனினும், இதற்கு அடுத்த வருட தொடக்கத்தில் தீர்வு கண்டு கொள்ளலாம் என்று பிரச்சனையை தற்காலிகமாக மூட்டை கட்டி வைத்து விட்டனர்.

ராஜஸ்தானில் புதிய தலைவலி

ஒருவழியாக பஞ்சாப் காங்கிரசில் நிலவி வந்த கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைத்த காங்கிரஸ் மேலிடத்திற்கு அதன் பக்கத்து மாநிலமான ராஜஸ்தானிலிருந்து
புதிய தலைவலி உருவாகியிருக்கிறது.

அது, ஏற்கனவே கடந்த ஆண்டு இதே ஜூலை மாதம் அந்த மாநில காங்கிரசில் வெடித்த புரட்சிதான்.

இந்த கலகம் வெடித்தபோது துணை முதலமைச்சராகவும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்த சச்சின் பைலட் தனக்கு 36 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்று திடீரென போர்க்கொடி உயர்த்தி நாங்கள் வெளியேறினால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பது உறுதி என்று ஒரு அதிர்ச்சியும் அளித்தார். ஆனால் அவருடைய பக்கம் 19 எம்எல்ஏக்கள் மட்டுமே சென்றனர். முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் 6 பேரும் சில சுயேச்சைகளும் ஆதரவு தெரிவிக்க ஆட்சி கவிழாமல் தவிர்க்கப்பட்டது. அதேநேரம் நாங்கள் காங்கிரசில்தான் இருக்கிறோம் என்று, சச்சின் பைலட் என்றுதொடர்ந்து கூறி வந்தார்.

அவர் இப்படி திடீர் என்று கொந்தளித்ததற்கு ஒரு நியாயமான காரணமும் இருந்தது.

2018-ல் அந்த மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இளம் தலைவர் சச்சின் பைலட்டை முன்நிறுத்தித்தான் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. ஆனால் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய பின்பு கடைசி நேரத்தில், மூத்த தலைவர் அசோக் கெலாட் முதல்வர் பதவியை தட்டிப்பறித்து விட்டார். இந்தக் கோபம்தான் அவரிடம் கனன்று கொண்டே இருந்தது.

இந்த நிலையில்தான் சச்சின் பைலட், அவருடைய ஆதரவு எம்எல்ஏக்களை சபாநாயகர்
தகுதி நீக்கம் செய்து உத்தரவு, ஐகோர்ட்டு தடை என்று விவகாரம் நீண்டுகொண்டே போனது.

பின்னர் சச்சின் பைலட் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவை சந்தித்து சமாதானம் ஆனார். எனினும் எனக்கு எந்த பதவி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை எனது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி தரவேண்டும் என்று ஒரு நிபந்தனையை மட்டும் முன்வைத்தார். அவருடைய இந்தக் கோரிக்கையை காங்கிரஸ் மேலிடம் கடந்த வாரம் வரை,
சிந்தித்து கூட பார்க்கவில்லை.

விழித்துக் கொண்ட சச்சின் பைலட்

அதேநேரம், கோரிக்கை வைத்து ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையில் சச்சின் பைலட் திடீரென விழித்துக் கொண்டார்.

பாஜகவில் 12 வருடம் எம்பியாக இருந்துவிட்டு காங்கிரசில் சேர்ந்த சித்துவின் பிரச்சினைக்கே மேலிடம் தீர்வு கண்டு விட்ட நிலையில் ஆரம்பம் முதலே காங்கிரஸில் இருந்து வரும் தனது பிரச்சினையை கட்சி தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கையில் மேலிடத்திற்கு அதை அண்மையில் நினைவூட்டினார்.

கட்சிக்குள் இருந்துகொண்டே சித்து போல சச்சின் பைலட்டும் குடைச்சல் கொடுக்ககூடாது என்று கருதிய காங்கிரஸ் மேலிடம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது. கட்சியின் மூத்த தலைவர்களான கே.சி. வேணுகோபால், அஜய் மக்கான் இருவரையும் காங்கிரஸின் இடைக்கால தலைவர் சோனியா உடனடியாக ராஜஸ்தான் அனுப்பி வைத்தார்.

தலைநகர் ஜெய்பூரில் முதலமைச்சர் அசோக் கெலாட்டை இன்று இருவரும் சந்தித்துப் பேசினர்.
பின்பு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரையும் சந்தித்து கலந்து ஆலோசித்தனர்.

அப்போது விரைவில் விரிவாக்கம் செய்யப்படவிருக்கும் அமைச்சரவையில் சச்சின் பைலட்
ஆதரவு எம்எல்ஏக்கள் சிலருக்கு அமைச்சர் பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் இதில் அசோக் கெலாட்டிற்கு கொஞ்சமும் இஷ்டம் இல்லை.

இதை சச்சின் பைலட்டுக்கு பயந்து எடுக்கப்படும் நடவடிக்கையாகவே அவர் கருதுகிறார்.
ஆனால் காங்கிரஸ் மேலிட கணக்கோ வேறு மாதிரியாக உள்ளது.

2023-ம் ஆண்டு ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும்போது, அசோக் கெலாட்டை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்தால் காங்கிரஸ் தோல்வி அடைந்துவிடலாம். ஏனென்றால் காங்கிரசில் இளைய தலைமுறையினரிடம் 43 வயது சச்சின் பைலட்டுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதால் அவரையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்று மேலிடம் கருதுகிறது.

அதேநேரம் 71 வயது அசோக் கெலாட்டை மீண்டும் தேசிய அரசியலுக்கு அழைத்துக்கொண்டு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜஸ்தானிலிருந்து போட்டியிட வைக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

சச்சின் பைலட் தனிக்கட்சி:

அசோக் கெலாட் இதை யூகித்து இருப்பதால்தான் அசைந்து கொடுக்க மறுக்கிறார். அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டால் சச்சின் பைலட் ஆதரவாளர்களில் ஒருசிலருக்கு மட்டும் பதவி கொடுத்தால்போதும் என்று அவர் நினைக்கிறார். அதிகமானவர்களுக்கு பதவி கொடுத்தால் சச்சின் பைலட்டின் கை கட்சியில் மறுபடியும் ஓங்கி விடும் என்பது அவருடைய எண்ணம்.

ஆனால் இந்த முறை சச்சின் பைலட் மிகத் தெளிவாக இருக்கிறார். அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போது தனது ஆதரவாளர்களில் குறைந்தபட்சம் நான்கு பேருக்காவது பதவிகளை எதிர்பார்க்கிறார். அப்படி ஒருவேளை, கொடுக்காவிட்டால் காங்கிரசிலிருந்து வெளியேறி, தனிக்கட்சி தொடங்கும் திட்டமும் அவரிடம் உள்ளது, என்கின்றனர்.

இப்படி நடந்துவிட்டால் அது காங்கிரசுக்கு பெரும் இழப்பாக அமைந்துவிடும். அவர் பாஜகவில் சேர்ந்து விட்டால் கூட பரவாயில்லை. ஆனால் தனிக்கட்சி மட்டும் தொடங்கி விடக்கூடாது என்பதில் சோனியா, ராகுல், பிரியங்கா மூவரும் உறுதியாக உள்ளனர்.

Rahul_Sonia_UpdateNews360

சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்கி விட்டால் 2023 சட்டப்பேரவைத் தேர்தலும்,
2024 நாடாளுமன்ற தேர்தலும் ராஜஸ்தானில் பாஜகவுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடும் என்று காங்கிரஸ் மேலிடம் கருதுகிறது. அதனால் இந்த முறை அசோக் கெலாட்டின் எதிர்ப்புக்குரல் எடுபடாது என்கிறார்கள்.

இதுபற்றி டெல்லியில் அரசியல் விமர்சகர்கள் கூறும் போது, “காங்கிரசுக்கு இது ஒரு நெருக்கடியான நேரம். மிக மூத்த தலைவர்கள் அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்கி கொள்ளவேண்டும் என்று சோனியாவும், ராகுலும் விரும்புகின்றனர். ஆனால் பல மாநிலங்களில் வளர்ந்து வரும் காங்கிரஸ் தலைவர்களுக்கு மூத்தவர்கள் முட்டுக்கட்டையாக உள்ளனர். இதுதான் பிரச்சனையே.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஜெயிக்க வேண்டுமென்றால் இளைஞர்களை முன்னிறுத்தினால்தான் அது நடக்கும் என்று மேலிடத் தலைவர்கள் உறுதியாக நம்புகின்றனர். எனவே சித்து விஷயத்தில் முடிவு எடுத்தது போலவே ராஜஸ்தான் விவகாரத்தில் சச்சின் பைலட்டுக்கு ஆதரவாகவே சோனியாவும், ராகுலும் நடந்து கொள்வார்கள்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இன்று ராஜஸ்தானில் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கும் என்கிறார்கள்.
அன்று யார் கை ஓங்கும் என்பது தெரிந்துவிடும்!

Views: - 216

0

0