விமானத் திருத்த மசோதா 2020 மாநிலங்களவையில் நிறைவேற்றம்..! முக்கிய அம்சங்கள் என்ன..?

15 September 2020, 3:39 pm
Aircraft_Amendment_Bill_2020_UpdateNews360
Quick Share

பாராளுமன்றத்தின் பருவமழைக் கூட்டத்தின்போது, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியால் தாக்கல் செய்யப்பட விமான சட்டத் திருத்த மசோதா 2020, இன்று மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த புதிய மசோதா மூலம் சிவில் விமானங்களின் உற்பத்தி, உடைமை, பயன்பாடு, செயல்பாடு, விற்பனை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மற்றும் ஏரோட்ரோம்களுக்கான உரிமம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் விமானச் சட்டம் 1934’இல் திருத்தம் செய்யப்படுகிறது.

மாநிலங்களவையில் மசோதா தொடர்பாக நடந்த விவாதத்தில், ​​ஆறு விமான நிலையங்களுக்கான அதானி குழுமத்தின் வெற்றிகரமான ஏலங்களைப் பற்றி காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் பேசினார்.

“அதானி குழு 6 விமான நிலையங்களை இயக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஏலம் எடுத்துள்ளது. ஒரு தனியார் நிறுவனத்திற்கு விமான நிலையங்களை வழங்குவதில் தெளிவான விதிமுறைகளை இது மீறுகிறது. அரசாங்கம் தனது சொந்த அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் சில ஆலோசனையை புறக்கணித்து, விதிமுறைகளில் மேற்கொண்ட மாற்றங்கள் அதானி குழுவால் அனைத்து 6 ஏலங்களையும் வெல்ல முடிந்தது.” எனப் பேசினார்.

அதற்கு பதிலளித்த ஹர்தீப் சிங் பூரி, “ஆறு விமான நிலையங்களைப் பற்றி நிறைய முறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 2006’இல் தனியார்மயமாக்கப்பட்ட இரண்டு விமான நிலையங்களான மும்பை மற்றும் டெல்லி, நம் போக்குவரத்து மற்றும் வருவாயில் 33% ஆகும். 2018’ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ஆறு விமான நிலையங்களும் மொத்தமாக சேர்த்து வெறும் 9% மட்டுமே.” எனக் கூறினார்.

டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை தனியார்மயமாக்கியதன் காரணமாக விமான நிலைய தனியார்மயமாக்கல் வரலாற்று சூழலில் பார்க்கப்பட வேண்டும் என்றும், விமான உள்கட்டமைப்பிற்கான வளங்கள் கிடைத்ததன் விளைவாக இந்திய விமான நிலைய ஆணையம் ரூ 29,000 கோடியைப் பெற்றது என்றும் அவர் கூறினார். “விமான நிலையத்திற்கான ஏலத்தில் பங்கேற்க கேரள அரசு கோரியது.

கேரள அரசாங்கத்தின் ஏலத்திற்கும் வென்ற நிறுவனத்திற்கும் இடையிலான இடைவெளி 19.3% ஆகும்.” என அதானி குழுமம் ஏலங்களை வென்றதற்கு கேரள மாநில அரசாங்கம் வெளியிட்ட எதிர்ப்பு குறித்து தெளிவுபடுத்தினார்.

விமானம் (திருத்தம்) மசோதா, 2020 : முக்கிய அம்சங்கள்

இந்த மசோதா சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் மூன்று விமான ஒழுங்குமுறை அமைப்புகளை மாற்ற முயல்கிறது. சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு பணியகம் (பிசிஏஎஸ்) மற்றும் விமான விபத்து விசாரணை பணியகம் (ஏஏஐபி) ஆகியவற்றை சட்டப்பூர்வமாக மாற்ற இந்த மசோதா வகை செய்கிறது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட இயக்குனர் ஜெனரல் தலைமலையில் இவை செயல்படும். 

மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி டி.ஜி.சி.ஏ பாதுகாப்பு மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை செயல்பாடுகளைக் கொண்டிருக்கும். சிவில் விமானப் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை பி.சி.ஏ.எஸ் மேற்கொள்ளும்.

விமான விபத்துக்களுக்கான விசாரணை நடவடிக்கைகள் குறித்து ஏஏஐபி ஆராயும். இந்த அமைப்புகளுக்கு பொது நலனுக்காக அவர்களின் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வழங்க முடியும்.

சர்வதேச சிவில் விமான அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ) பரிந்துரைத்தபடி இந்த அமைப்புகளின் சட்டரீதியான நிலை இந்தியாவின் விமான பாதுகாப்பு தரத்தை மேம்படுத்த உதவும்.

பாதுகாப்புச் விமானங்களை விமானச் சட்டம், 1934’இன் வரம்பிலிருந்து விலக்கி வைப்பதற்கும், விதிமீறல்களுக்கான அபராதங்களை தற்போதைய ரூ 10 லட்சத்திலிருந்து ரூ 1 கோடியாக உயர்த்தவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

ஒரு நபர் சட்டத்தின் ஏதேனும் விதிமுறைகளை மீறினால், ஒருவருக்கு வழங்கப்பட்ட உரிமங்கள், சான்றிதழ்கள் அல்லது ஒப்புதல்களை ரத்து செய்ய இந்த மசோதா மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. அதே நேரத்தில் இந்த மசோதா நாட்டின் ஆயுதப்படை விமானங்களுக்கு விலக்கு அளிக்கிறது.

ஏற்கெனவே மக்களவையால் ஒப்புதல் வழங்கப்பட்ட மசோதா இதற்போது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதால், விரைவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாகும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

Views: - 5

0

0