ராமர் கோவில் அறக்கட்டளைத் தலைவர் கோபால் தாஸுக்கு கொரோனா உறுதி..! மேதந்தா மருத்துவமனையில் அனுமதி..!

13 August 2020, 2:21 pm
Nritya_Gopal_Das_Updatenews360
Quick Share

ராமர் கோவில் அறக்கட்டளைத் தலைவர் மகந்த் நிருத்யா கோபால் தாஸுக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுராவில் நடந்த ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்களில் பங்கேற்க கோபால் தாஸ் மதுராவுக்கு விஜயம் செய்திருந்தார்.

ஆரம்பத்தில் லேசான காய்ச்சல் அறிகுறிகளைக் காட்டிய கோபால் தாஸுக்கு கொரோனா இல்லை எனக் கூறப்பட்ட நிலையில், விரைவில் அதிகாரிகளால் இது உறுதி செய்யப்பட்டது.

“ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைத் தலைவர் மஹந்த் ஸ்ரீ நிருத்யா கோபால் தாஸ் ஜி மஹாராஜுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்ட தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருக்கு உடனடி மருத்துவ வசதி அளிக்க மேதந்தா மருத்துவமனையின் டாக்டர் நரேஷ் ட்ரேஹனுடன் பேசியுள்ளேன். அவர் விரைவாக குணமடைய ஸ்ரீ ராமரிடம் பிரார்த்தனை செய்கிறேன்.” என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

“இதில் அச்சப்படுமளவுக்கு எதுவும் இல்லை. அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. முதலமைச்சரும் நிலைமையைக் கண்காணித்து வருகிறார். மேலும் சிறந்த சிகிச்சைக்காக மகாராஜ் ஜியை மேதந்தாவுக்கு மாற்றுமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார்.” என்று மதுரா ஆட்சியர் எஸ்.ஆர்.மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறினார்.

உத்தரபிரதேச முதல்வர் மருத்துவ நிபுணர்களுடன் கலந்துரையாடிய பின்னர், மகந்த் மேலதிக சிகிச்சைக்காக மேதந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

முன்னதாக ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவரான கோபால் தாஸ் சமீபத்தில் ஆகஸ்ட் 5’ஆம் தேதி ராமர் கோவிலின் பூமி பூஜை விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் மேடையை பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். நிகழ்வின் போது கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தவிர, கொரோனா விதிமுறைகள் மற்றும் சமூக இடைவெளிக்கான நெறிமுறைகளும் நிகழ்வின் போது பின்பற்றப்பட்டன.

இந்த நிகழ்வை தனிப்பட்ட முறையில் கண்காணித்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்வின் போது கொரோனா நிர்வாகமே தனது மிகப்பெரிய அக்கறை என்று கடுமையாக வலியுறுத்தினார்.

Views: - 8

0

0