“ஊடகங்கள் மூலம் கவனச்சிதறல்கள் ஏற்படுத்துவது ஏழைகளுக்கு உதவாது” – மத்திய அரசுக்கு ராகுல்காந்தி அறிவுறுத்தல்..!

26 August 2020, 12:49 pm
Quick Share

பல மாதங்களாக நான் எச்சரிக்கை விடுத்து வந்ததை ரிசர்வ் வங்கி தற்போது உறுதிப்படுத்தியுள்ளது என காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செவ்வாயன்று ஆர்பிஐ ஆண்டறிக்கையை வெளியிட்டார். அதில் “கொரோனா காலக்கட்ட பொருளாதார நெருக்கடியினால் ஏழைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதாரா மீட்சிக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதார பாதிப்பை துல்லியமாக அறுதியிடவும் முடியாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவினால் நம் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அதிர்ச்சியைச் சந்தித்துள்ளது, குறிப்பாக போக்குவரத்து, ஹோட்டல், விடுதிகள் உள்ளிட்ட விருந்தோம்பல் துறை, பொழுதுபோக்கு துறை ஆகியவை ஸ்தம்பித்துள்ளது.

தனி நுகர்வு முடங்கியுள்ளது. உணவு மற்றும் தயாரிப்புப் பொருட்களின் விநியோகம் சீராக இல்லாததால் அவற்றின் விலை உயரும், பணவீக்கம் உயரும். நிதிச்சந்தைகளில் காணப்படும் ஏற்ற இறக்கங்களும் பணவீக்கத்துக்கு வழிவகுக்கும். காய்கறிகள், பருப்பு, இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலை உயர்வால் நாட்டின் சில்லறை பணவீக்கம் 6.93% ஆக அதிகரித்துள்ளது.

எனினும் அக்-மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் இது குறைந்து விடும். நடப்பு ஆகஸ்ட் பிற்பாதியில் கொரோனா காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 12% ஆக வீழ்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நகர்ப்புற நுகர்வு பேரதிர்ச்சி கண்டுள்ளது. பயணிகள் வாகன விற்பனை நுகர்பொருள் சப்ளை பின்னடைவு கண்டுள்ளது.
வரும் மார்ச்சில் பொருளாதாரம் பின்னடைவுப் பாதையிலிருந்து மீண்டு முன்னேற்றப்பாதைக்குச் செல்லும், பொருளாதார மீட்சிக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது”.

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, பல மாதங்களாக நான் எச்சரித்ததை ரிசர்வ் வங்கி இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து அரசு செய்ய வேண்டியது யாதெனில், அதிக செலவு செய்யுங்கள், அதிக கடன் கொடுக்க வேண்டாம்.

தொழிலதிபர்களுக்கு வரியை ரத்து செய்வதை விடுத்து ஏழை மக்களுக்கு பணத்தை கொடுங்கள். நுகர்வு மூலம் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்யுங்கள். ஊடகங்கள் மூலம் கவனச்சிதறல்கள் ஏற்படுத்துவது ஏழைகளுக்கு உதவாது அல்லது பொருளாதார பேரழிவு மறைந்து போகாது, என கூறியுள்ளார்.

Views: - 34

0

0