நிர்பயா வழக்கு:கருணை மனுவை நிராகரிக்குமாறு டெல்லி ஆளுநர் உள்துறைக்கு பரிந்துரை

4 December 2019, 10:46 pm
Nirbhaya-case-Updatenews360
Quick Share

டெல்லி: டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கருணை மனுவை நிராகரிக்குமாறு டெல்லி ஆளுநர் உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 வாலிபர்களால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் ஆறு பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆறு பேரில் ஒருவர் சிறார் என்பதால் அவர் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மீதி ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மீதமுள்ள 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் ஜெயிலுக்குள் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மற்ற 4 வாலிபர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது.பவன்குப்தா, முகேஷ்சிங், தனேஷ் சர்மா, அக்ஷய்தாகூர் ஆகிய 4 வாலிபர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து அவர்களை தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் தங்களது தண்டனையை குறைக்க வேண்டும் என்று கருணை மனுக்களை தாக்கல் செய்தனர்.அந்த கருணை மனுக்களை நேற்று முன்தினம் டெல்லி மாநில ஆளுநர் அனில் பைஜால் தள்ளுபடி செய்தார். இதைதொடர்ந்து குற்றவாளிகள் நான்கு பேரின் மனு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கருணை மனுக்களில் வினய் சர்மா என்பவரின் மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு டெல்லி ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.