சென்ற தீபாவளியில் சுர்ஜித்….இப்ப பிரகால்த்…ஆழ்துளை கிணற்றில் அடுத்தடுத்து சிக்கும் பிஞ்சுகள்..!!

5 November 2020, 12:44 pm
prakalth borewell - updatenews360
Quick Share

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணி 2வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.

போபால்: மத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ளது சேதுபுராபரா. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவரது 3 வயது மகன் பிரகால்த், விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த மூடப்படாத 200 அடி ஆழ்துளை கிணற்றில் நேற்று தவறி விழுந்தான்.

குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, பிரகால்த் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கும் தீயணைப்பு படைக்கும் தகவல் கொடுத்ததால், மீட்பு படையினர் வந்து மீட்பு பணியை தொடங்கி உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ராணுவம் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுவன் பிரகால்த்தை மீட்கும் பணி 2வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. 200 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் 100க்கும் கீழே தண்ணீர் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் குழந்தை எத்தனையாவது அடியில் சிக்கியுள்ளது என்பது பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை. குழந்தையை உயிருடன் மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் திருச்சி விராலிமலை பகுதியில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுஜித் என்ற சிறுவனை உயிருடன் மீட்க நடந்த பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்தன. 4 நாட்களுக்கு பிறகு சிறுவனின் உடலைத்தான் மீட்க முடிந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது மற்றொரு 3 வயது குழந்தை மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூடப்படாத ஆழ்துளை கிணறுகளால் இன்னும் எத்தனை குழந்தைகளின் அழுகுரலை கேட்க வேண்டிய நிலைமை வருமோ?..சிலரின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை பிஞ்சுகளை கண் முன்னே இழப்பதோ….!!

Views: - 13

0

0