அதிர்ஷ்ட விக்கிரகம் என கூறி ரூ.5 கோடிக்கு பேரம் : போலியை பார்த்து போலீசுக்கு தகவல் அளித்த வியாபாரி.. 4 பேர் கைது!!!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2021, 6:54 pm
Fake Sales - Updatenews360
Quick Share

ஆந்திரா : விஜநகரம் அருகே கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட மிகப்பழமையான அதிர்ஷ்ட விக்கிரகம் என்ற பெயரில் போலி விக்கிரகம் தயாரித்து 5 கோடி ரூபாய் பேரம் பேசி இறுதியில் 5 லட்ச ரூபாய்க்கு விற்க முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் விஜய நகரத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ், ராமசய்யம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெகநாத் ராவ், சட்டீஸ்கரை சேர்ந்த கிரண்குமார் ஆகியோர் விஜய நகரத்தை சேர்ந்த வியாபாரி மகேஷ் என்பவரை அணுகி தங்களிடம் மிக பழமையான கோவில் ஒன்றிலிருந்து எடுத்துவரப்பட்ட தேவதை விக்கிரகம் ஒன்று உள்ளது.

1818 ஆம் ஆண்டில் ஈஸ்ட் இந்தியா கம்பெனி என்ற முத்திரையுடன் இருக்கும் அந்த விக்ரஹத்தை வீட்டில் வைத்து பூஜை செய்தால் அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்று கூறி நம்ப வைத்தனர்.

விக்கிரகத்தை பெறுவதற்காக தங்களுக்கு 5 கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். இறுதியாக நீண்ட நேர பேரத்திற்கு பின் ஐந்து லட்ச ரூபாய் பணம் கொடுக்க மகேஷ் ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து முதலில் அட்வான்ஸாக 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறி 20 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டனர். பின்னர் அதிர்ஷ்ட விக்கிரகத்தை பார்ப்பதற்கு இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறினர்.

அவர்கள் கேட்டு கொண்டபடி மகேஷ் இரண்டரை லட்ச ரூபாய் பணம் கொடுத்து விக்கிரகத்தை பார்த்தார். அப்போது 1818 ஈஸ்ட் இந்திய கம்பனி என்ற முத்திரையுடன் காணப்பட்ட அந்த விக்ரஹம் ஏதோ பழங்கால சிப்பாய் விக்கிரகம் போலிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த மகேஷ் விஜயநகரம் போலீசாருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த போலீசார் சீனிவாசலு,ராம சத்யம், கிரன் குமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து அந்த விக்கிரகத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இந்த மோசடி சம்பவம் பற்றி நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் ஜெகநாத் ராவை தேடி வருகின்றனர்.

Views: - 264

0

0