2 பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.900 கோடி டெபாசிட்: குறுஞ்செய்தியால் ஏற்பட்ட குழப்பம்…பீகாரில் ஷாக்!!

Author: Aarthi Sivakumar
16 September 2021, 6:20 pm
Quick Share

பீகார்: பீகாரில் இரண்டு பள்ளி மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.900 கோடி டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் கட்ஹார் மாவட்டம் பாஸ்டியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அஷிஷ்ட் குமார். அவர்கள் இருவரும் பள்ளி மாணவர்கள். அவர்களுக்கு உத்தர் பீகார் கிராமின் வங்கியில் வங்கிக் கணக்கு உள்ளது.

இந்நிலையில், அவர்கள் இருவரும் தங்களது பள்ளிச் சீருடைக்காக அரசு எவ்வளவு ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது என்று சோதனை செய்வதற்காக அருகிலுள்ள எஸ்.பி.ஐ வங்கிக்கு சென்றுள்ளது. அப்போது அவர்களது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

வங்கியில் சோதனை செய்தபோது விஸ்வாஸ் வங்கிக் கணக்கில் 60 கோடி ரூபாய் பணம் இருந்துள்ளது. அதேநேரத்தில் அஷிஷ்ட் குமார் வங்கிக் கணக்கில் 900 கோடி ரூபாய் பணம் இருந்துள்ளது. இந்த விவகாரம் தெரியவந்த நிலையில் வங்கி மேலாளர் மனோஜ் குப்தாவும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், சிறுவர்களின் வங்கி கணக்கை சோதித்த போது அதில் குறைந்த அளவிலான தொகையே இருந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உதயன் மிஸ்ரா கூறியதாவது, இரண்டு பள்ளி சிறுவர்களின் வங்கிக்கணக்கில் அதிகளவு பணம் டெபாசிட் செய்யப்பட்ட செய்தி எனக்கும் வந்தது.

பணம் அனுப்பும் கணினி முறையில் சில பிரச்னைகள் இருந்ததாக வங்கி மேலாளர் தெரிவித்து உள்ளார். சிறுவர்களின் வங்கிக்கணக்கில் குறைவான பணமே உள்ளது. ஆனால், கணிணி கணக்கில் ரூ.900 கோடி எனக்காட்டுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்களுக்கும் அவ்வாறு பணம் ஏதும் வந்துள்ளதா? என அக்கிராமத்தினர் வங்கிக்கும், ஏ.டி.எம்., மையங்களுக்கும், படையெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக இதேபோன்றதொரு சம்பவம் பீகார் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தை சேர்ந்தவர் ரஞ்சித் தாஸ். இவரது வங்கி கணக்கில் வங்கி ஊழியர்களின் தவறால் சுமார் 5.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வங்கி கணக்குக்கு பணம் வந்த மகிழ்ச்சியில் கவுண்டமணி காமெடியில் வருவது போல் இஷ்டத்துக்கு பணத்தை செலவு செய்துவிட்டார். தன் கணக்கு பணம் வந்தது குறித்து வங்கிக்கும் இவர் தெரியப்படுத்தவில்லை.

இந்நிலையில் பணத்தை வேறொருவர் கணக்கில் தவறாக வரவு வைத்துவிட்டோம் என உணர்ந்த வங்கி ஊழியர்கள் ரஞ்சித் தாஸை தொடர்புக்கொண்டு உங்கள் கணக்கில் 5.5 லட்சத்தை தவறாக வரவு வைத்துவிட்டோம் பணத்தை திருப்பித்தாருங்கள் எனக் கேட்டுள்ளனர்.

அந்த இளைஞர் கூறிய பதிலை கேட்டு வங்கி ஊழியர்கள் ஷாக்காகி உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி எல்லா மக்களின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுறேன்னு வாக்குறுதி குடுத்தார். அதில் முதல் தவணையாக 5.5 லட்சம் என்னுடைய அக்கவுண்டில் போட்டிருக்கார். நான் பணத்தை செலவு செய்துவிட்டேன் திருப்பித் தரமுடியாது எனக் கூறியுள்ளார். இதுபோன்றதொரு சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 182

0

0