மகர விளக்கு பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு..!!

15 November 2020, 7:06 am
SABARIMALAI-UPDATENEWS360
Quick Share

சபரிமலை: நடப்பாண்டின் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜை இன்று தொடங்குகிறது. இதையொட்டி, இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.

அதைத் தொடர்ந்து சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோவில்களுக்கு மேல் சாந்திகள் வி.கெ.ஜெயராஜ் போற்றி, எம்.ரஜிகுமார் ஆகியோரின் அபிஷேக சடங்கு சன்னிதானத்தில் நடைபெறும். அதை தொடர்ந்து 18ம் படிக்கு கீழ் உள்ள ஆழியில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி தீ மூட்டுவார்.

Sabarimalai Closed- updatenews360

அன்றைய தினம் மற்ற பூஜைகள் நடைபெறாது. இதை தொடர்ந்து நடை அடைக்கப்படும். திங்கட்கிழமை கார்த்திகை 1 முதல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். புதிய மேல்சாந்தி வி.கெ.ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதனைதொடர்ந்து, பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 26ம் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14ம் தேதியும் நடைபெறும். சீசனை முன்னிட்டு, நடை திறப்பதையொட்டி நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு ஏராளமான போலீசார் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். தினசரி 1000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும், மண்டல மகர விளக்கு நாட்களில் 5 ஆயிரம் பக்தர்களும் என நிர்ணயிக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Sabarimalai - updatenews360

மேலும் கொரோனா இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழை பக்தர்கள் கொண்டு வர வேண்டும். மருத்துவ சான்றிதழ் இல்லாத பக்தர்கள் கண்டிப்பாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். பக்தர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளி விட்டு மலை ஏறவேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பக்தர்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க சுகாதாரத்துறை, திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Views: - 19

0

0