சாத்தான்குளம் வழக்கை கேளராவிற்கு மாற்றக்கோரி மனு : தமிழக அரசின் பதிலை கேட்கும் உச்சநீதிமன்றம்..!!

16 April 2021, 4:20 pm
Quick Share

டெல்லி : சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை கேரளாவிற்கு மாற்றம் செய்யக்கோரிய மனு தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்து.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவருடை மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அங்கு போலீசார் தாக்கியதில் இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, அவர்களின் உயிரிழப்புக்கு காரணமான 10 போலீசார் கைது செய்யப்பட்டு, சிபிசிஐடி விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டனர். அவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் இறந்ததால், 9 பேரின் மீதான விசாரணை தொடர்ந்து வருகிறது.

பின்னர், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதன் பிறகு, சாத்தான்குளம் மற்றும் கோவில்பட்டியிலும் விசாரணையை நடத்தி முடித்து விட்டதால், விசாரணை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கை கேரளாவிற்கு மாற்றம் செய்யக்கோரி, இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சிறையில் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், எனவே, இந்த வழக்கின் விசாரணை நேர்மையாக நடக்க, திருவனந்தபுரம் நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனிடையே, இந்த வழக்கை கேரளாவிற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஜெயராஜின் மனைவி செல்வராணி இடையூட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சாத்தான்குளம் வழக்கை கேரள உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 76

0

0