கோவா ஆளுநர் மேகாலயாவுக்கு மாற்றப்பட்டார்..! மகாராஷ்டிரா ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு..! ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு.!
18 August 2020, 11:59 amகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சத்ய பால் மாலிக்கை மேகாலயாவின் ஆளுநராக நியமித்தார். மகாராஷ்டிராவின் ஆளுநராக இருக்கும் பகத் சிங் கோஷ்யாரிக்கு கோவாவின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2019’இல் மாலிக் கோவா கவர்னராக நியமிக்கப்பட்டார். முன்னதாக ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக பணியாற்றினார். ஆகஸ்ட் 2019’இல் ஜம்மு காஷ்மீர் அதன் சிறப்பு அந்தஸ்தைப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டபோது மாலிக் ஆளுநர் பொறுப்பில் இருந்தார்.
1965’ஆம் ஆண்டில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய மாலிக், முதன்முதலில் 1980’ல் லோக் தல் கட்சியின் உறுப்பினராக மாநிலங்களவைகுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986’ஆம் ஆண்டில் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து 2005’இல் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரில் தனது பதவிக் காலத்தில், 2018 ஜூன் மாதம் பாஜக-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி வீழ்ச்சியடைந்த பின்னர், மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதாகக் கூறி அரசியல் கட்சிகளிடமிருந்து ஒரு கடிதம் கூட தனக்கு கிடைக்கவில்லை என்று கூறி மாலிக் ஒரு சர்ச்சையைத் தூண்டினார். பின்னர் அவர் ராஜ் பவனில் பேக்ஸ் இயந்திரம் வேலை செய்யவில்லை எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து சிறிய மாநிலமான கோவாவிலும், ஒரு புதிய ராஜ் பவனைக் கட்டுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை அவர் ரத்து செய்தார். மேலும் மாநிலத்தின் நிதி நிலை மேம்படும் வரை கட்டுமானத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கூறி மாநில பாஜக அரசுடன் மோதினார்.
இந்நிலையில் அவர் தற்போது இல்லாத மேகாலயா மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் வசம் இருந்த கோவா மாநில ஆளுநர் பொறுப்பு, மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகிக்கும் பகத் சிங் கோஷ்யாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.