ஜனவரி 21’ல் விவசாயிகளுடன் முதல் கூட்டம்..! நடுநிலையாக செயல்படுவோம் என உச்சநீதிமன்றக் குழு உறுதி..!

19 January 2021, 4:37 pm
Farmers_Protest_UpdateNews360
Quick Share

உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, விவசாயிகள், மத்திய மற்றும் மாநில அரசு உள்ளிட்ட புதிய வேளாண் சட்டங்கள் தொடர்புடைய அனைவரின் கருத்துக்களையும் கோரும் என்று கூறியுள்ளது.

குழுவின் முதல் கூட்டத்திற்குப் பிறகு, அதன் உறுப்பினர் அனில் கன்வத், உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கையைத் தயாரிக்கும் போது, குழு உறுப்பினர்கள் வேளாண் சட்டங்கள் குறித்த தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை ஒதுக்கி வைத்து, நடுநிலையாக செயல்படுவோம் என வலியுறுத்தினார்.

குழு விவாதங்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறிய அனில் கன்வத், தங்களுக்கு முன் உள்ளமிகப்பெரிய சவால், விவசாயிகளை தங்களுடன் பேசவும் பகிர்ந்து கொள்ளவும் நம்ப வைப்பது தான் என்றும் அதற்கான எல்லா முயற்சிகளையும் செய்வோம் என்றும் கூறினார்.

குழு தனது முதல் சுற்று பேச்சுவார்த்தைகளை விவசாயிகள் மற்றும் பிறருடன் ஜனவரி 21’ஆம் தேதி நடத்தும் என்று அனில் கன்வத் தெரிவித்தார்.

“விவசாயிகளுடனான முதல் கூட்டம் ஜனவரி 21’ஆம் தேதி நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களை நேரில் சந்திக்க விரும்பும் அமைப்புகளுடன் சந்திப்பு நடத்தப்படும். எங்களிடம் நேரில் வரமுடியாதவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்டம் நடத்தப்படும்.” என அவர் மேலும் கூறினார்.

“குழு உறுப்பினர்கள் வேளாண் சட்டங்கள் குறித்த தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை ஒதுக்கி வைத்து, உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அறிக்கை தயாரிக்கும் போது விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் கூறிய கருத்துக்களை மட்டுமே தொகுத்து வழங்குவோம்.” என்று அவர் விவசாயிகளுக்கு உறுதியளித்துள்ளார்.

“நாங்கள் எந்தவொரு கட்சியிலிருந்தும் அல்லது அரசாங்க தரப்பிலிருந்தும் இல்லை என்பதை விவசாயிகளிடம் நாங்கள் உறுதியாக கூற விரும்புகிறோம். நாங்கள் உச்சநீதிமன்ற தரப்பைச் சேர்ந்தவர்கள்” என்று கூறியுள்ளார்.

ஆனால் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்புகள், உச்சநீதிமன்றம் நியமித்துள்ள அனைத்து உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் எனத் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஜனவரி 11’ஆம் தேதி உச்சநீதிமன்றம் நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தது. ஆனால் அவர்களில் ஒருவரான பூபிந்தர் சிங் மான், குழுவிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார்.

மானுக்கு மாற்றாக ஏதாவது செய்யப்படுமா என்பது குறித்து கூறிய கன்வத், இந்தக் குழு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளது என்றும் யாரை நியமிக்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும் எனக் கூறினார்.

Views: - 0

0

0