தேசத்துரோக வழக்கு: லட்சத்தீவு போலீசார் முன்பு ஆயிஷா சுல்தானா ஆஜர்

20 June 2021, 9:55 pm
Quick Share

லட்சத்தீவு நிர்வாகத்தின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்குக்கு எதிராக முன் ஜாமீன் பெற்ற நடிகை ஆயிஷா சுல்தானா நீதிமன்ற நிபந்தனைப்படி இன்று லட்சத்தீவு போலீசார் முன்பு ஆஜரானார்.

லட்சத்தீவுகளின் நிர்வாக அதிகாரியாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபுல் கோடா படேல் பொறுப்பேற்றார். லட்சத்தீவுகளில் மாட்டிறைச்சிக்குத் தடை மது விற்பனைக்கு அனுமதி உட்பட பல்வேறு சட்டத் திருத் தங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளார். இந்த விதிமுறைகள் லட்சத்தீவின் பாரம்பரிய கலாசாரம், வாழ்க்கை முறைகளுக்கு எதிரானது என எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து பிரபுல் படேலை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று லட்சத்தீவில் வசிக்கும் பூர்வகுடிகள் போர்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில் லட்சத்தீவுகளில் பிறந்த நடிகை ஆயிஷா சுல்தானா, மலையாள தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்றார். விவாத்தத்தின் போது, கொரோனா பாதிப்பு இல்லாத லட்சத்தீவுகளில் தொற்று பரவ, பிரபுல் படேல் காரணம் என்று விமர்சித்தார்.

லட்சத்தீவுகளை அழிக்க மத்திய அரசு அனுப்பி வைத்த உயிரி ஆயுதம் (bio-weapon) என்று அவரை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து ஆயிஷா சுல்தானாவுக்கு எதிராக லட்சத்தீவுகளின் பாஜக தலைவர் அப்துல் காதர், லட்சத்தீவு யூனியன் பிரதேச தலைநகர் கவரட்டி போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு, அரசின் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி, நடிகை ஆயிஷா சுல்தானா மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒரு வார கால இடைகால முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. போலீஸ் விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தது. இதையடுத்து இன்று லட்சத்தீவு வந்த ஆயிஷா சுல்தானா தலைநகர் கவரட்டியில் உள்ள காவல்நிலையத்தில் போலீசார் முன்பு ஆஜரானார்.

Views: - 172

1

0