காங்கிரஸுக்கு டாடா காட்டிய சீனியர் தலைவர்… மாற்று கட்சிக்கு தாவி ராஜ்யசபா தேர்தலிலும் போட்டி… சோனியா ஷாக்…!!

Author: Babu Lakshmanan
25 May 2022, 1:19 pm
Quick Share

2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த படுதோல்விக்கு பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி என்பதே எட்டாக் கனியாக இருந்து வருகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் படுதோல்வியே சந்தித்தது. இதனால், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 2ஆக சுருங்கிப் போய்விட்டது. இந்த நிலை தொடர்ந்து இந்தியாவில் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய் விடும் என்ற அச்சம் காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே எழுந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், திமுக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கும் காங்கிரஸ் மீதான நம்பிக்கை குறைந்து விட்டது. எனவே, காங்கிரஸ் இல்லாத 3வது அணியை உருவாக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இதில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் தனித்தனியே முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவை அத்தனைக்கும் மேலாக காங்கிரஸ் கட்சிக்கு வலுமையான தலைமை இல்லாததே, கட்சியின் அழிவுக்கு காரணம் என்று குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். காங்கிரசை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதேவேளையில், காங்கிரஸ் கட்சியின் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும், காங்கிரஸ் தலைமையை மாற்ற வேண்டும் என்றும், அதுவும் சோனியா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாதவர்களுக்கு தலைமை பொறுப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் சிந்தனை கூட்டத்தில் முக்கிய முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்தவித முடிவும் எடுக்காமல் அந்தக் கூட்டம் நிறைவடைந்தது. இதனால், காங்கிரஸ் கட்சியில் மாற்றத்தை விரும்பியவர்கள் மற்றும் அதிருப்தி காங்கிரஸ் தலைவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் அக்கட்சியில் இருந்து விலகியதாக அறிவித்தது சோனியா உள்ளிட்டோருக்கு அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 16ம் தேதியே காங்கிரஸில் இருந்து விலகுவது தொடர்பான கடிதத்தை, கட்சியின் தலைமைக்கு அவர் கடிதம் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், காங்கிரஸில் இருந்து விலகிய அவர் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் ராஜ்யசபா தேர்தலிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியள்ளது.

காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் தலைவர்களில் முக்கியமானவர் வேறு கட்சிக்கு தாவி விட்டதால், இனி அடுத்தடுத்து மற்ற தலைவர்களும் விபரீத முடிவை எடுத்து விடுவார்களோ..? என்ற அச்சம் காங்கிரஸ் மேலிட தலைவர்களிடையே எழுந்துள்ளது.

Views: - 653

0

0