கட்சியிலிருந்து விலகும் முன் அஜித் தோவலிடம் பேசிய ஷா பைசல்..! மீண்டும் காஷ்மீர் ஆட்சிப் பணிக்கு திரும்புவது உறுதி..?

13 August 2020, 12:16 pm
Shah_Faesal_updateNews360
Quick Share

ஜம்மு காஷ்மீரில் கடந்த வருடம் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு புதிதாக கட்சி தொடங்கிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா பைசல், மத்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட பின்னரே கட்சியிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் கட்சியிலிருந்து வெளியேறுவதாக ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கத்தில் (ஜே.கே.பி.எம்) தொண்டர்களுக்கு தெரிவிக்கும் முன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்.எஸ்.ஏ) அஜித் தோவலுடன் விரிவாக விவாதித்துள்ளார்.

2009’ஆம் ஆண்டில் சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த 37 வயதான பைசல், இந்து குறித்த விபரங்களை வெளியிட மறுத்த நிலையிலும், புதுடெல்லியில் உள்ள அதிகாரிகளுடன் தான் தொடர்பில் இருப்பதை ஒப்புக் கொண்டார்.

“அரசாங்கத்தில் உள்ளவர்களுடன் நான் நடத்திய உரையாடல்கள் குறித்து நிறைய ஊகங்கள் உள்ளன. நான் இந்திய ஆட்சிப் பணியில் இருந்துள்ளேன். எனவே நான் அரசாங்கத்தில் உள்ள நபர்களைச் சந்தித்தால் அது ஒன்றும் புதிதல்ல.” என்று அவர் கூறினார்.

“நான் இங்கு வாழ வேண்டும். வேலை செய்ய வேண்டும். இது மிகவும் சாதாரணமானது.” என்று அவர் கூறினார். எனினும் இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதற்கிடையே அரசு வட்டாரங்களில், பைசல் இந்திய ஆட்சிப் பணியில் மீண்டும் சேருவதை எதிர்க்கவில்லை என்றும், அவரை மீண்டும் பணியில் அமர்த்தலாம் என்றும் பேச்சு உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் காஷ்மீரின் இளைஞர்களின் குரலாக இருப்பதாக உறுதியளித்த பைசல் நீண்ட தூரம் வந்துவிட்டார். அவரது கருத்துக்களும் மாறிவிட்டன. “1949’ஆம் ஆண்டில் தேசிய ஒருமித்த கருத்து 370’வது பிரிவை இணைப்பதைப் பற்றியும் என்பதையும், 2019 தேசிய ஒருமித்த கருத்து அகற்றுவதைப் பற்றியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தேசத்தின் மனநிலையை நாம் புரிந்துகொண்டு யதார்த்தத்திற்கு ஏற்ப வர வேண்டும்.” எனக் கூறினார்.

2019’ஆம் ஆண்டின் முற்பகுதியில், பைசல் ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து அரசாங்கத்தின் விமர்சகரானார். கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஜம்மு & காஷ்மீர் அதன் சிறப்பு அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்ட நேரத்தில் அவர் வெளியிட்ட ட்வீட்டில், “அரசியல் உரிமைகளை மீட்டெடுப்பதற்கு காஷ்மீருக்கு நீண்ட, நீடித்த வன்முறையற்ற அரசியல் வெகுஜன இயக்கம் தேவைப்படும். ஆர்டிகிள் 370’ஐ ஒழிப்பது முக்கிய நீரோட்டத்தை முடித்துவிட்டது. அரசியலமைப்பாளர்கள் போய்விட்டார்கள். எனவே நீங்கள் இப்போது ஒரு கைக்கூலியாகவோ அல்லது பிரிவினைவாதியாகவோ மட்டுமே இருக்க முடியும்.” எனத் தெரிவித்திருந்தார்.

அவர் இப்போது தனது ட்வீட் அனைத்தையும் நீக்கியுள்ளார். கைக்கூலி மற்றும் பிரிவினைவாத கருத்தை விளக்குமாறு கேட்டபோது, “தேர்தல் அரசியல் பற்றி நான் அப்போது பேசிக் கொண்டிருந்தேன். விவகாரம் முடிந்ததும் மக்கள் உங்களை கைக்கூலி அல்லது பிரிவினைவாதி என்று அழைப்பார்கள் என்று நான் சொன்னேன். நான் இந்த இருவரில் ஒருவராக இல்லை என்று சொன்னேன்.” எனத் தெரிவித்தார்.

அவர் மேலும், “நான் இந்த நாட்டின் பெருமைமிக்க குடிமகன். மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். இந்த லேபிள்களை நான் அடையாளம் காணவில்லை.” என கூறினார்.

Views: - 30

0

0