“சத்யமேவ ஜெயதே” : சுஷாந்த் வழக்கில் சிபிஐ விசாரணையை வரவேற்ற சரத் பவார் பேரன்..!
19 August 2020, 12:49 pmபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கு காரணமாக குற்றம் சாட்டப்பட்ட நடிகை ரியா சக்ரவர்த்தி மற்றும் பிறருக்கு எதிராக பாட்னாவில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை சி.பி.ஐ.க்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற பீகார் அரசு தகுதி வாய்ந்தது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கை சிபிஐ எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத் பவாரின் பேரன் பார்த் பவார் இந்த நடவடிக்கையை வரவேற்று ட்விட்டரில், சத்யமேவ ஜெயதே என பதிவிட்டுள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு குரல் கொடுத்த மாநிலங்களவை எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட பல தலைவர்களும் இந்த நடவடிக்கையை வரவேற்றனர். சுப்பிரமணியன் சுவாமி, சிபிஐ ஜெய் ஹோ என்று ட்வீட் செய்துள்ளார்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற பீகார் அரசு தகுதி வாய்ந்தது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராஜ்புத்தின் தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங்கின் புகாரின் பேரில் பீகார் காவல்துறையினர் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர் சரியானது என்றும் சி.பி.ஐ பற்றிய குறிப்பு சட்டபூர்வமானது என்றும் நீதிபதி ஹிருஷிகேஷ் ராய் அமர்வு கூறியது.
பீகாரில் பாட்னாவிலிருந்து மும்பைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கின் விசாரணையை மாற்றக் கோரி நடிகர் ரியா சக்ரவர்த்தியின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்த நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.